யாழ்ப்பாணம், நல்லூர் பகுதியில் தியாக தீபத்தின் நினைவாலயத்தில் தியாக தீபத்தின் சிலை வைக்கப்பட்ட சம்பவம் தொடர்பாக, யாழ்ப்பாண மாநகர சபை முதல்வரிடம் குற்றப்புலனாய்வுப் பிரிவினர் (CID) சுமார் இரண்டு மணி நேரம் விசாரணை மேற்கொண்டு வாக்குமூலங்களைப் பதிவு செய்துள்ளனர்.
மாநகர சபைக்குப் புதன்கிழமையன்று (21.10.2026) சென்ற குற்றப்புலனாய்வுப் பிரிவினர், முதல்வரின் அலுவலகத்தில் வைத்து இந்த விசாரணைகளை நடத்தியுள்ளனர்.
அப்போது, ‘திலீபன் விடுதலைப் புலிகள் அமைப்பைச் சேர்ந்தவர் எனத் தெரிந்தா சிலை வைப்பதற்கு அனுமதி வழங்கினீர்கள்?’ என்று அவரிடம் கேள்வி எழுப்பப்பட்டுள்ளது. அதற்கு முதல்வர், அவர் விடுதலைப் புலிகள் அமைப்பைச் சேர்ந்தவர் எனத் தெரியும் என்றும், ஆனால் அவர் ஆயுதப் போராட்டத்தில் உயிரிழக்கவில்லை எனவும், அஹிம்சை வழியில் போராடியே உயிர் நீத்தார் எனவும் பதிலளித்துள்ளார்.
தொடர்ந்து, சிலை உருவாக்கப்பட்ட இடம் மற்றும் சிலையை வைத்தவர்கள் தொடர்பிலும் காவல்துறையினர் விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்.
தியாக தீபத்தின் 39ஆம் ஆண்டு நினைவேந்தல் நிகழ்வின் ஆரம்ப நாளான செப்டம்பர் 15ஆம் திகதி வெண்கலச் சிலை வைக்கப்பட்டு, தொடர்ந்து 12 நாட்கள் அஞ்சலி நிகழ்வுகள் இடம்பெற்றன.
அதனைத் தொடர்ந்து, செப்டம்பர் 27ஆம் திகதி யாழ்ப்பாண தலைமைப் பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி தலைமையிலான சுமார் 20க்கும் மேற்பட்ட பொலிஸார் இரண்டு பொலிஸ் வாகனங்களில் வந்து நினைவாலயத்திலிருந்து சிலையை எடுத்துச் சென்றனர்.
இதனைத் தொடர்ந்து சிலை வைக்கப்பட்ட சம்பவம் தொடர்பில் யாழ்ப்பாண நீதவான் நீதிமன்றத்தில் வழக்குத் தாக்கல் செய்யப்பட்டுள்ளதுடன், சிலையும் நீதிமன்றத்தில் ஒப்படைக்கப்பட்டது.
இந்நிலையில், சிலை வைக்கப்பட்டமை தொடர்பாகத் தொடர் விசாரணைகளை முன்னெடுத்து வரும் காவல்துறையினர், அரசியல்வாதிகள் உள்ளிட்டவர்களிடம் விசாரணை நடத்தியுள்ள நிலையில், 17ஆவது நபராக மாநகர சபை முதல்வரிடம் விசாரணைகளை முன்னெடுத்து வாக்குமூலங்களைப் பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.











