அமெரிக்காவின் இடைத்தேர்தலில் கனேடிய அரசாங்கம் தலையிட முயல்வதாகவும், அது தொடர்பான கவலைகளைப் பிரதமர் மார்க் கார்னியின் அரசாங்கம் அலட்சியப்படுத்துவதாகவும் ஒட்டாவாவிலுள்ள அமெரிக்கத் தூதரகம் பகிரங்கமாகக் குற்றம்சாட்டியுள்ளது.
அமெரிக்காவில் நவம்பர் மாதம் 3ஆம் திகதி நடைபெறவுள்ள தேர்தலில், கனேடிய தரப்பிலிருந்து தலையீடுகள் இருக்கலாம் என அமெரிக்க அதிகாரிகள் கடந்த சில வாரங்களாக எச்சரித்து வருகின்றனர்.
இது தொடர்பாக ஒட்டாவாவிலுள்ள அமெரிக்கத் தூதரகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், டிரம்ப் நிர்வாகத்தின் கவலைகளை கனேடிய அரசாங்கம் பொருட்படுத்தாமல் உதாசீனப்படுத்துவதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது.
ஒன்ராறியோ முதல்வர் டக் ஃபோர்ட், கைத்தொழில் அமைச்சர் மெலனி ஜோலி மற்றும் பல முக்கிய கனேடிய அரசியல்வாதிகளின் கருத்துக்கள் அமெரிக்கத் தேர்தலைத் திசைதிருப்பும் முயற்சிகளாக உள்ளதாக அந்த அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
இதேவேளை, அமெரிக்கத் தூதரகத்தின் இந்த குற்றச்சாட்டைப் பிரதமர் மார்க் கார்னியும், ஒன்ராறியோ முதல்வர் டக் ஃபோர்ட்டும் திட்டவட்டமாக மறுத்துள்ளனர்.
அமெரிக்கத் தேர்தல்களில் தலையிடும் எந்தவொரு நோக்கமும் தமக்கு இல்லை எனத் தெரிவித்த ஒன்ராறியோ முதல்வர் டக் ஃபோர்ட், ஒன்ராறியோ மற்றும் கனடாவின் பொருளாதாரத்தையும், பொதுமக்களையும் பாதுகாப்பதிலேயே தனது கவனம் இருப்பதாகக் குறிப்பிட்டுள்ளார்.











