நாட்டின் புதிய முக்கியத் திட்டங்கள் தொடர்பான ‘சி-39’ சட்ட மசோதாவில் அவசர கதியில் மேற்கொள்ளப்படும் திருத்தங்களால் சுற்றுச்சூழல் மற்றும் வனவிலங்குகளுக்குப் பேரழிவு ஏற்படும் என்று முன்னணி விஞ்ஞானிகள் மற்றும் கல்வியாளர்கள் எச்சரித்துள்ளனர்.
பிரமதர் மார்க் கார்னி தலைமையிலான மத்திய அரசினால் சமர்ப்பிக்கப்பட்ட இந்த மசோதாவில் உரிய மாற்றங்களைச் செய்யக் கோரி றோயல் சொசைட்டி ஆஃப் கனடா (Royal Society of Canada) அமைப்பைச் சேர்ந்த 56 விஞ்ஞானிகள் நாடாளுமன்றத்திற்குத் திறந்த கடிதம் எழுதியுள்ளனர்.
திட்டங்களை விரைந்து செயல்படுத்தும் நோக்கில் கொண்டுவரப்பட்டுள்ள இந்த ‘கனடாவை வலுப்படுத்தும் சட்டம்’ (Building Canada Strong Act) எனப்படும் 243 பக்க மசோதா மீது நாடாளுமன்றத்தின் சிறப்பு மற்றும் செனட் குழுக்கள் ஆய்வு செய்து வருகின்றன.
முதலீடுகளை ஈர்ப்பது மற்றும் பொருளாதார வளர்ச்சியை மேம்படுத்துவது அவசியமானது என்றாலும், தற்போது சமர்ப்பிக்கப்பட்டுள்ள மசோதாவில் உள்ள விதிகள் இயற்கை வளம், வனவிலங்குகள் மற்றும் மனிதர்களின் ஆரோக்கியத்திற்குப் பேராபத்தை விளைவிக்கும் வகையில் இருப்பதாக விஞ்ஞானிகள் சுட்டிக்காட்டியுள்ளனர்.
தற்போதுள்ள சுற்றுச்சூழல் பாதுகாப்புச் சட்டங்களை இந்த மசோதா மீறுவதாகக் குறிப்பிட்ட அவர்கள், அவசரமான ஒப்புதல்களுக்காகத் திருத்தங்கள் செய்யப்படுவதைக் கடுமையாக எதிர்த்துள்ளனர்.
ஆபத்தான நிலையில் உள்ள கடல்வாழ் உயிரினங்கள் மற்றும் மீன்வளம் போன்றவற்றுக்கான பாதுகாப்புச் சட்டங்கள் பாதிக்கப்படலாம் என்றும், எதிர்காலத்தில் கடுமையான சுற்றுச்சூழல் பாதிப்புகள் உருவாகும் என்றும் அவர்கள் கவலை தெரிவித்துள்ளமை குறிப்பிடத் தக்கது.











