போலி நூல்களைக் கண்டறிந்து அகற்றும் அறம் சார்ந்த குழுவை தமிழக அரசு அமைக்க வேண்டும் என இயக்குநர் சீனு ராமசாமி கோரிக்கை விடுத்துள்ளார்.
கோவையில் கடந்த ஆட்சியில் தொடங்கப்பட்ட பெரியார் அறிவுலக நூலகப் பணிகள் தற்போதைய தவெக ஆட்சியில் நிறைவுபெற்று முதலமைச்சர் விஜய் அவர்களால் திறந்து வைக்கப்பட்டது.
இந்நிலையில், எழுத்தாளர் பெருமாள் முருகன் எழுதிய கட்டுரை மூலம் இந்த நூலகத்தில் விதிகளை மீறி முறையற்ற வகையில் புத்தகங்கள் கொள்முதல் செய்யப்பட்டுள்ளதாகக் குற்றம் சாட்டப்பட்டது.
‘கல் விளக்கு’ போன்ற சரிவர அறியப்படாத அல்லது முகவரி இல்லாத போலிப் பதிப்பகங்களிடம் இருந்து 1,800-க்கும் மேற்பட்ட புத்தகங்கள் வாங்கப்பட்டுள்ளதாகவும், அவற்றில் பல போலியான ISBN எண்கள் பயன்படுத்தப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டது.
இந்த விவகாரம் குறித்து இயக்குநர் சீனு ராமசாமி தனது சமூகவலைதளப் பதிவில் வெளியிட்டுள்ளதாவது: “கோவை பெரியார் பொது நூலகத்தில் போலி நூல்களின் அணிவகுப்பு அளவுக்கு அதிகமாக இருப்பதாக எழுத்தாளர் பெருமாள் முருகன் மற்றும் அதை ஆய்வு செய்யும் ஊடகத்துறையினர் பதிவிட்டு வருகிறார்கள். நூலகத் தேர்வுக் குழுவை உருவாக்கியது போல ‘போலி’ நூல்களைக் கண்டறிந்து அகற்றும் சிறந்த, அறம் சார்ந்த குழுவைத் தமிழக அரசு மாவட்டம் தோறும் உருவாக்கி, உடனடியாகத் தமிழ்நாட்டில் இருக்கக்கூடிய அத்தனை நூலகங்களிலும் ஆய்வு செய்து அங்கே இருந்துவரும் ‘போலி’ நூல்களை அப்புறப்படுத்தும்படி அன்போடு கேட்டுக்கொள்கிறேன்.
பள்ளி, கல்லூரி, பல்கலைக்கழகங்கள், பொது நூலகங்கள், கிளை நூலகங்கள், தமிழக அரசின் ஆவணக் காப்பகங்கள் என அரசு சம்பந்தப்பட்ட அனைத்துப் பிரிவின் நூலகங்களையும் ஆய்வு செய்ய வேண்டியது மிக அவசியம்.
மேலும் அப்படி ஒரு சூழல் உருவாகி இருப்பதை நினைத்து உள்ளத்தால் வருந்துகிறேன். ஒரு பெருமாள் முருகன் நூலகத்துக்குச் சென்றது போல ஒவ்வொரு சிற்றூரிலும் ஒவ்வொரு கிராமத்திலும் ஒவ்வொரு மாவட்டங்களிலும் அனைத்துத் துறைகளைச் சார்ந்தவர்கள் நூலகங்களுக்குச் சென்று போலி நூல்களைக் கண்டறிந்து உதவும்படி அன்போடு கேட்டுக்கொள்கிறேன்” என அவர் குறிப்பிட்டுள்ளார்.











