நடிகர் விஜய் சேதுபதி தனது திரைப்பயணத்தில் மற்றொரு அரிய மைல்கல்லை எட்டியுள்ளார்.
நவம்பர் 23 அன்று நியூயார்க்கில் நடைபெறவுள்ள 54வது சர்வதேச எம்மி விருதுகள் விழாவில் விருது வழங்கும் பிரபலங்களில் ஒருவராக அவர் பங்கேற்க உள்ளார்.
சர்வதேச எம்மி விருது வழங்கும் மேடையில் இந்த கௌரவத்தைப் பெறும் முதல் இந்திய நடிகர் விஜய் சேதுபதி ஆவார்.
இதற்கு முன்னர் 2016ஆம் ஆண்டில் பிரைம்டைம் எம்மி விருது வழங்கும் மேடையில் நடிகை பிரியங்கா சோப்ரா விருது வழங்கியிருந்தது குறிப்பிடத்தக்கது.
அமெரிக்காவுக்கு வெளியே தயாரிக்கப்பட்டு, ஒளிபரப்பப்படும் சிறந்த தொலைக்காட்சி நிகழ்ச்சிகள், தொடர்கள் மற்றும் கலைஞர்களைக் கௌரவிப்பதற்காகச் சர்வதேச எம்மி விருதுகள் வழங்கப்படுகின்றன.
இதனிடையே, நித்திலன் சுவாமிநாதன் இயக்கத்தில் விஜய் சேதுபதி நடித்த ‘மகாராஜா’ திரைப்படம் ஹாலிவுட்டில் ரீமேக் செய்யப்படவுள்ளது.
இப்படத்தின் ரீமேக் உரிமைகளுக்காக ஒரு முன்னணி ஹாலிவுட் ஏஜென்சி தன்னை அணுகியதாகத் தயாரிப்பாளர் சுதன் சுந்தரம் தெரிவித்துள்ளார்.
மேலும், இப்படத்தில் ஹாலிவுட் நட்சத்திரம் மேத்யூ மெக்கனாஹி நடிக்கக்கூடும் என்ற யூகங்களும் சமூக ஊடகங்களில் எழுந்துள்ளன.
சர்வதேச அளவில் பாராட்டப்பட்ட இப்படம் சீனாவில் பாக்ஸ் ஆபிஸில் சுமார் 91.65 கோடி ரூபாய் வசூல் ஈட்டியிருந்தது.
மறுபுறம், பாலாஜி தரனீதரன் இயக்கத்தில் விஜய் சேதுபதி நடிப்பில் வெளியான ‘பத்தா’ திரைப்படம் வரவேற்பைப் பெற்றதைத் தொடர்ந்து, அடுத்ததாக மிஷ்கின் இயக்கத்தில் அவர் நடித்த ‘ட்ரெயின்’ திரைப்படம் அடுத்த மாதம் வெளியாகவுள்ளது.
மேலும், பூரி ஜகன்நாத் இயக்கத்தில் அவர் நடித்த ‘ஸ்லம்டாக்’ படமும், மணிரத்னம் இயக்கத்தில் ‘இஞ்சி வெல்லம்’ படமும் வரவுள்ளமை குறிப்பிடத்தக்கது.











