ஒன்டாரியோ மாகாணத்தில் அதிகரித்து வரும் குப்பைக் கிடங்கு நெருக்கடிக்குத் தீர்வுகாணும் வகையில், குப்பைகளை எரித்து மின்சாரம் தயாரிக்கும் திட்டங்களை விரிவுபடுத்த மாகாண அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளது.
முதலமைச்சர் டக் ஃபோர்டின் அரசாங்கம் அறிமுகப்படுத்தியுள்ள மசோதா 140 மூலம், புதிய குப்பைக் கிடங்குகள் மற்றும் கழிவிலிருந்து மின்சாரம் தயாரிக்கும் நிலையங்களை அமைப்பதற்கான கட்டுப்பாடுகள் தளர்த்தப்படவுள்ளன.
ஒன்டாரியோவில் இன்னும் பத்து ஆண்டுகளுக்குள் குப்பைக் கிடங்குகளின் கொள்ளளவு தீர்ந்துவிடும் அபாயம் இருப்பதாக சுற்றுச்சூழல் அமைச்சர் தெரிவித்துள்ளார்.
எனினும், குப்பைகளை எரிப்பதால் காற்று மாசுபாடு அதிகரிப்பதுடன், மறுசுழற்சி முயற்சிகளும் பாதிக்கப்படலாம் என சுற்றுச்சூழல் அமைப்புகள் எச்சரித்துள்ளன.
இதேவேளை, மசோதா 140 சட்டமன்றத்தின் இரண்டாம் வாசிப்பில் நிறைவேற்றப்பட்டு, மேலதிக பரிசீலனைக்காகக் குழுவுக்கு அனுப்பப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.










