காணாமல் ஆக்கப்பட்டோர் தொடர்பான உண்மைகளைக் கண்டறிந்து, பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு நீதி வழங்குவதற்கு அரசாங்கமும் சிவில் சமூக அமைப்புகளும் ஒன்றிணைந்து செயற்பட வேண்டும் என தேசிய சமாதானப் பேரவையின் நிறைவேற்றுப் பணிப்பாளர் கலாநிதி ஜெஹான் பெரேரா தெரிவித்துள்ளார்.
காணாமல் போனோர் அலுவலகத்தின் செயற்பாடுகள் தொடர்பில் சிவில் சமூக அமைப்புகளுக்கு விழிப்புணர்வூட்டும் பயிற்சிச் செயலமர்வு யாழ்ப்பாண மாவட்டச் செயலகத்தில் நடைபெற்றது.
இதன்போது கருத்துத் தெரிவித்த அவர், பல தசாப்தங்களுக்கு முன்னர் காணாமல் ஆக்கப்பட்ட தமது கணவர்கள், பிள்ளைகள் மற்றும் உறவினர்களின் நிலை குறித்து அறிந்துகொள்ளப் பல குடும்பங்கள் இன்னமும் காத்திருப்பதாகக் குறிப்பிட்டார்.
காணாமல் போனோர் அலுவலகத்தின் பிரதான நோக்கம் காணாமல் ஆக்கப்பட்டவர்களுக்கு என்ன நடந்தது என்பதைக் கண்டறிந்து, அவர்களது குடும்பங்களுக்கு உண்மையான தகவல்களை வழங்குவதாகும் என்றும் தெரிவித்தார்.
மேலும், கடந்த கால உண்மைகளைக் கண்டறிந்து அதிலிருந்து பாடங்களைக் கற்றுக்கொள்வதன் மூலமே பாதிக்கப்பட்ட மக்களுக்கு நீதி வழங்குவதுடன், எதிர்காலத்தில் இவ்வாறான சம்பவங்கள் மீண்டும் இடம்பெறுவதைத் தடுக்க முடியும் எனவும் வலியுறுத்தினார்.











