கியூபெக் முதல்வர் போல் செயின்ட்-பியர் பிளமண்டனுக்கும் செனகல் ஜனாதிபதி பசிரு டியோமாயே ஃபாயேக்கும் (Bassirou Diomaye Faye) இடையில் சந்திப்பொன்று இடம்பெற்றுள்ளது.
கம்போடியாவின் புனோம் பென் (Phnom Penh) நகரில் ஆரம்பமான சர்வதேச பிராங்கோபோனி அமைப்பின் (OIF) 20 ஆவது உச்சிமாநாட்டின் பக்க அம்சமாகவே இந்தச் சந்திப்பு ஒழுங்கு செய்யப்பட்டிருந்தது.
இதன்போது, செனகல் மற்றும் கியூபெக் இடையிலான உறவுகளின் தரத்தை செனகல் ஜனாதிபதி ஃபாயே பாராட்டியுள்ளார்.
அத்துடன், இருதரப்பு ஒத்துழைப்பை வலுப்படுத்தவும் வர்த்தகத்தை அதிகரிக்கவும் இரு தலைவர்களும் விருப்பம் தெரிவித்துள்ளனர்.
செனகலின் ஸ்திரத்தன்மை மற்றும் சாதகமான சூழல் அதனை “ஆபிரிக்காவுக்கான இயற்கையான நுழைவாயிலாகவும் பிராந்திய மையமாகவும்” மாற்றுவதாக கியூபெக் முதல்வர் குறிப்பிட்டதாக செனகல் ஜனாதிபதி செயலகம் தெரிவித்துள்ளது.
இந்த உச்சிமாநாட்டின் போது கியூபெக் முதல்வர் போல் செயின்ட்-பியர் பிளமண்டன், வியட்நாம் ஜனாதிபதி டோ லாம் (Tô Lâm), சுவிட்சர்லாந்து உப ஜனாதிபதி இக்னாசியோ காசிஸ் (Ignazio Cassis) ஆகியோரை செனகல் ஜனாதிபதி சந்தித்துள்ளார்.
தொலைத்தொடர்பு, நெல் விவசாயம், தொழிற்பயிற்சி மற்றும் முதலீடுகள் ஆகிய துறைகளில் ஒத்துழைப்பை வலுப்படுத்துவது குறித்து இந்தச் சந்திப்புகளின் போது கலந்துரையாடப்பட்டதாக செனகல் ஜனாதிபதி செயலகம் குறிப்பிட்டுள்ளது.
இளைஞர் வேலைவாய்ப்பு, பொதுச் சுகாதாரம் மற்றும் செனகலின் சர்வதேச அந்தஸ்தை உயர்த்தும் நோக்கில் முன்னெடுக்கப்படும் ‘பன்முகப்படுத்தப்பட்ட மற்றும் உறுதியான பங்காளித்துவ’ இராஜதந்திரத்தின் ஒரு பகுதியாக இந்தச் சந்திப்புகள் அமைந்துள்ளதாக செனகல் ஜனாதிபதி செயலகத்தின் உத்தியோகபூர்வ இணையத்தளத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
எவ்வாறாயினும், இதுவரை எவ்வித ஒப்பந்தங்களும் கைச்சாத்திடப்படவில்லை என்பதுடன், நிதி ஒதுக்கீடுகள் குறித்த விபரங்களும் வெளியிடப்படவில்லை.










