முன்னணி தொலைத்தொடர்பு நிறுவனங்கள் வாடிக்கையாளர்களின் தொலைபேசி அழைப்புகளுக்கு 10 நிமிடங்களுக்குள் மனிதப் பிரதிநிதி மூலம் பதிலளிக்க வேண்டும் என்பதைக் கட்டாயமாக்கும் சட்டத்தைக் கொண்டுவருமாறு கோரிக்கை முன்வைக்கப்பட்டுள்ளது.
மத்திய அரசிடம் இக்கோரிக்கையை முன்வைத்து, ஒன்ராரியோ மாகாணத்தைச் சேர்ந்த ஃபிராங்க் பிரவுன் என்பவர் ஆதரவு கோரும் மனு ஒன்றைத் தொடங்கியுள்ளார்.
இம்மனுவில் இதுவரை 1,200-க்கும் மேற்பட்டோர் கையொப்பமிட்டுள்ளனர்.
ரோஜர்ஸ் (Rogers), பெல் (Bell) மற்றும் டீலஸ் (Telus) போன்ற நிறுவனங்களின் வாடிக்கையாளர் சேவைக்காக நீண்ட நேரம் காத்திருக்க வேண்டிய நிலை குறித்துப் பலரும் அதிருப்தி வெளியிட்டு வரும் நிலையில், இந்த மனு தொடங்கப்பட்டுள்ளது.
தொலைத்தொடர்பு நிறுவனங்களைத் தொடர்பு கொள்ள முயற்சித்த சிலர் தாம் இரண்டு மணி நேரம் வரை காத்திருந்ததாகக் குறிப்பிட்டு, இந்தக் காலதாமதத்தை விமர்சித்துள்ளனர்.
இதேவேளை, கனடாவின் தொலைத்தொடர்புத் துறையில் வாடிக்கையாளர் புகார்கள் 17 சதவீதம் அதிகரித்துள்ளதாகவும், கட்டணப் பிரச்சினைகளே இதற்கு முக்கியக் காரணமாக உள்ளதாகவும் கண்காணிப்பு அமைப்புகள் தெரிவித்துள்ளன.











