யாழ்ப்பாண மாவட்டத்திலுள்ள சமுர்த்தி வங்கிகளின் கணக்காய்வு மற்றும் முன்னேற்ற மீளாய்வுக் கூட்டமானது யாழ்.மாவட்ட பதில் செயலர் மருதலிங்கம் பிரதீபன் தலைமையில் இன்றைய தினம் செவ்வாய்க்கிழமை யாழ்ப்பாண மாவட்ட செயலக கேட்போர் கூடத்தில் நடைபெற்றது.
அதன் போது மாவட்ட செயலர் கருத்து தெரிவிக்கும் போது,
யாழ்ப்பாண மாவட்டத்தில் 33 சமுர்த்தி வங்கிகள் இயங்கி வருவதாகவும், சமுர்த்தி வேலைத்திட்டத்திலிருந்த நிவாரண வழங்கல் விடுவிக்கப்பட்டு நலன்புரி நன்மைகள் திட்டத்துடன் இணைக்கப்பட்டுள்ளதாகவும், வங்கிகளின் நுண்நிதி செயற்பாடுகள் தொடர்பாக எழும் வினாக்கள் மீது அதிக கவனம் செலுத்த வேண்டும் எனவும், தற்போது எமது யாழ்ப்பாண மாவட்டமானது சமுர்த்தி வங்கிச் செயற்பாடுகளில் தேசிய அளவில் முன்னணி வகிப்பதாகவும் அதற்கு சமுர்த்தி சார்ந்த அலுவலகர்களின் ஒத்துழைப்பிற்கு தமது நன்றியினையும் தெரிவித்தார்.
மேலும் மக்களின் வறுமையினை குறைத்து அவர்களின் பொருளாதாரத்தினை உயர்த்துவதற்கு சமுர்த்தி முகாமையாளர்கள், உத்தியோகத்தர்கள் மென்மேலும் வினைத்திறனாக செயற்பட வேண்டும் எனவும் கேட்டுக்கொண்டார்.
இக் கலந்துரையாடலில் மாவட்ட சமுர்த்தி பணிப்பாளர், கணக்காளர், சமுர்த்தி முகாமையாளர்கள் (தலைமைப்பீடம்), வங்கி முகாமையாளர்கள், மாவட்ட சமுர்த்தி உத்தியோகத்தர்கள் ஆகியோா் கலந்து கொண்டனர்.











