ஹப்புத்தளை புகையிரத நிலையத்தில் இன்று (12) காலை ரயிலில் பயணித்த யுவதி ஒருவர் தவறி விழுந்து படுகாயமடைந்துள்ளதாக ஹப்புத்தளை பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
கொழும்பு கோட்டையில் இருந்து பதுளை நோக்கி பயணித்த 1045 இலக்க இரவு தபால் ரயிலில் யுவதி பயணித்துள்ளார். 21 வயதுடைய பல்கலைக்கழக மாணவி என பொலிஸார் தெரிவித்தனர்.
அவள் உட்பட 18 பேர் எல்ல பிரதேசத்திற்கு சுற்றுலா சென்று கொண்டிருந்த போது, ஹப்புத்தளை ரயில் நிலையத்தில் காலை 6.30 மணியளவில் ரயிலில் இருந்து இறங்கிய அவர், மீண்டும் ரயிலில் ஏறச் செல்லும் போது அதிலிருந்து தவறி விழுந்துள்ளார்.
அவர் கீழே விழுந்தபோது அவரது இடது காலின் மீது ரயில் பயணித்துள்ளதால், அவர் படுகாயமடைந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
விபத்தில் சிக்கிய யுவதி உடனடியாக தியத்தலாவை ஆரம்ப வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளதுடன், ஹப்புத்தளை பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.