உங்கள் வீட்டில் உள்ளோருக்கு உருளைக்கிழங்கு ரொம்ப பிடிக்கும்? இதனாலேயே உங்கள் வீட்டில் அடிக்கடி உருளைக்கிழங்கை சமைப்பீர்களா? பொதுவாக உருளைக்கிழங்கைக் கொண்டு வறுவல், மசாலா, கூட்டு என்று தான் செய்திருப்பீர்கள்.
ஆனால் அடுத்தமுறை உருளைக்கிழங்கு சைடு டிஷ் செய்வதாக இருந்தால், வழக்கமாக செய்வதை செய்யாமல், ஒருமுறை உருளைக்கிழங்கு 65 செய்யுங்கள். இந்த உருளைக்கிழங்கு 65 ரெசிபியை ஒருமுறை செய்தால், பின் அடிக்கடி செய்வீர்கள். அந்த அளவில் இது ருசியாகவும், செய்வதற்கு சுலபமாகவும் இருக்கும்.
உங்களுக்கு உருளைக்கிழங்கு 65 ரெசிபியை எப்படி செய்வதென்று தெரிந்து கொள்ள வேண்டுமா? கீழே உருளைக்கிழங்கு 65 ரெசிபியின் எளிய செய்முறை கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.
தேவையான பொருட்கள்: உருளைக்கிழங்கு – 4 ,உப்பு – சிறிது,இஞ்சி பூண்டு பேஸ்ட் – 1/4 டீஸ்பூன்,காஷ்மீரி மிளகாய் தூள் – 1 டீஸ்பூன், மல்லித் தூள் -1/2 டீஸ்பூன், மஞ்சள் தூள் – 1/4 டீஸ்பூன்,கரம் மசாலா – 1/4 டீஸ்பூன், சீரகத் தூள் – 1/4 டீஸ்பூன், மிளகுத் தூள் – 1/4 டீஸ்பூன், உப்பு – சுவைக்கேற்ப எலுமிச்சை – பாதி ,அரிசி மாவு – 2 டீஸ்பூன், சோள மாவு – 2 டீஸ்பூன்,மைதா மாவு – 2 டீஸ்பூன், தண்ணீர் – சிறிது, எண்ணெய் – பொரிப்பதற்கு தேவையான அளவு
செய்முறை: முதலில் உருளைக்கிழங்கின் தோலை நீக்கிவிட்டு, அதை ஓரளவு பெரிய துண்டுகளாக வெட்டி நீரில் போட்டுக் கொள்ள வேண்டும். பின்பு துண்டுகளாக்கப்பட்ட உருளைக்கிழங்கை நீரில் 2 முறை கழுவிக் கொள்ள வேண்டும். பின் அதில் உருளைக்கிழங்கு மூழ்கும் அளவில் நீரை ஊற்றி, சிறிது உப்பு சேர்த்து அடுப்பில் வைத்து, பாதியாக உருளைக்கிழங்கை வேக வைத்து எடுத்து, நீரை வடிகட்டிக் கொள்ள வேண்டும். பிறகு பாதியாக வேக வைத்த உருளைக்கிழங்குடன் இஞ்சி பூண்டு பேஸ்ட், காஷ்மீரி மிளகாய் தூள், மல்லித் தூள், மஞ்சள் தூள், கரம் மசாலா, சீரகத் தூள், மிளகுத் தூள், சுவைக்கேற்ப உப்பு சேர்த்துக் கொள்ள வேண்டும். பின்னர் அதில் பாதி எலுமிச்சையை பிழிந்து, அரிசி மாவு, சோள மாவு, மைதா மாவு ஆகியவற்றை சேர்த்து கைகளால் நன்கு கிளறி விட வேண்டும். பின் அதில் சிறிது நீரைத் தெளித்து, சிக்கன் 65 பதத்திற்கு பிரட்டி, மூடி வைத்து 10 நிமிடம் ஊற வைக்க வேண்டும். பின்பு ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் பொரிப்பதற்கு தேவையான அளவு எண்ணெய் ஊற்றி சூடானதும், உருளைக்கிழங்குகளை கொஞ்சம் கொஞ்சமாக சேர்த்து 2 நிமிடம் ப்ரை செய்து எடுத்துக் கொள்ள வேண்டும். பின் ப்ரை செய்த உருளைக்கிழங்குகளை எண்ணெயில் மீண்டும் போட்டு, 2 நிமிடம் ப்ரை செய்து எடுத்தால், மொறுமொறுப்பான உருளைக்கிழங்கு 65 தயார்.