மன்னார் மாவட்டத்தில் நேற்று வெள்ளிக்கிழமை (23) இரவு வரை பெய்த கடும் மழை காரணமாக 2045 குடும்பங்களை சேர்ந்த 7778 நபர்கள் பாதிக்கப்பட்டுள்ளதாக மன்னார் மாவட்ட அனர்த்த முகாமைத்துவ நிலையம் தெரிவித்துள்ளது.
இந்த நிலையில் மன்னார் பிரதேச செயலாளர் பிரிவில் உள்ள பல்வேறு கிராமங்கள் வெள்ள நீரில் மூழ்கியுள்ளதோடு,மக்கள் பல்வேறு இடர்களுக்கு முகம் கொடுத்துள்ளதோடு,தற்காலிக முகாம்களிலும் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.
இந்த நிலையில் பாதிக்கப்பட்ட மக்களை வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன் நேற்றைய தினம் வெள்ளிக்கிழமை (23) நேரடியாக சென்று பார்வையிட்டதோடு,அவசர உதவியாக உலர் உணவு பொதியையும் வழங்கி வைத்தார்.
குறிப்பாக மன்னார் பிரதேச செயலாளர் பிரிவில் உள்ள பாவிலுப்பட்டான் குடியிருப்பு மக்கள் இடம் பெயர்ந்து அப்பகுதியில் உள்ள ஆலயத்தில் தங்கி உள்ள நிலையில் அவர்களுக்கு இரவு உணவு வசதிகளை ஏற்படுத்திக் கொடுத்தார்.
மேலும் நடுக்குடா கிராம மக்களும் பாதிக்கப்பட்ட நிலையில் அப்பகுதியில் உள்ள கோயில்களில் தங்கியுள்ள நிலையில் அம் மக்களையும் நேரடியாக சென்று பார்வையிட்டதோடு அந்த மக்களுக்கு தேவையான அவசர உதவிகளையும் முன்னெடுத்தார்.
மேலும் மன்னார் கீரி பகுதிக்கு நேற்று வெள்ளி இரவு விஜயம் செய்த பாராளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன் பாதிக்கப்பட்ட மக்களுக்கு அத்தியாவசிய உதவியாக உலர் உணவு பொதிகளையும் வழங்கி வைத்தார்.மேலும் மாவட்டத்தில் கடுமையாக பாதிக்கப்பட்ட மக்களுக்கான அவசர உதவிகளை முன்னெடுக்க உரிய அதிகாரிகளின் கவனத்திற்கு கொண்டு சென்றுள்ளார்.
பாராளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கல நாதனுடன் அவரது செயலாளர் டானியல் வசந்தன் நேரடியாக விஜயம் செய்தமை குறிப்பிடத்தக்கது.