வீட்டுவசதி கூட்டுறவுச் சங்கங்களின் (Housing Co-operatives) தன்னாதிக்க உரிமை மற்றும் நிர்வாகக் கட்டமைப்பைக் கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வருவதற்காக முன்வைக்கப்பட்டிருந்த சர்ச்சைக்குரிய ‘பில் 20’ சட்டமூலத்தின் திட்டங்களை கியூபெக் மாகாண அரசு முற்றாகக் கைவிட்டுள்ளது.
கியூபெக் மாகாணத்தில் மலிவு விலை வீட்டுவசதியை மேம்படுத்துதல் மற்றும் பல்வேறு சீர்திருத்தங்களை உள்ளடக்கி, கடந்த பெப்ரவரி மாதம் ‘பில் 20’ சட்டமூலம் தாக்கல் செய்யப்பட்டது.
இந்த சட்டமூலத்தின் அமுலாக்கத் திட்டம் ஆனது, கூட்டுறவுச் சங்கங்களின் அடிப்படைத் தத்துவத்தையே அழித்துவிடும் என 14,000 க்கும் மேற்பட்டோர் கையெழுத்திட்ட பாரிய மனு அரசிடம் சமர்ப்பிக்கப்பட்டது.
கியூபெக் மாகாணம் முழுவதும் உள்ள வீட்டுவசதி அமைப்புகள், கூட்டுறவுச் சங்க உறுப்பினர்கள் மற்றும் எதிர்க்கட்சிகளிடமிருந்து எழுந்த கடுமையான எதிர்ப்புகளைத் தொடர்ந்தே, அரசு இந்த ‘பில் 20’ சட்டமூலத்தின் திட்டங்களைக் கைவிடும் முடிவை மேற்கொண்டுள்ளது.
கியூபெக் வீட்டுவசதித் துறை அமைச்சர் பிரான்ஸ்-எலைன் டுரான்சோ (France-Élaine Duranceau) இந்த பின்வாங்கலை உத்தியோகபூர்வமாக அறிவித்துள்ளார்.
தாம் அனைவரது கருத்துகளுக்கும் செவிசாய்த்துள்ளதாகக் குறிப்பிட்டுள்ள அவர், கூட்டுறவுச் சங்கங்களின் தனித்துவமான ஜனநாயக மாதிரியைப் பாதுகாக்கும் நோக்கில் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாகத் தெரிவித்தார்.











