ஒன்டாரியோ மாகாணத்தில் அமையவுள்ள பிரம்மாண்டமான ‘க்ராஃபோர்ட் நிக்கல்’ (Crawford Nickel Project) சுரங்கத் திட்டத்திற்கு மத்திய அரசு அதிகாரப்பூர்வமாக அனுமதி வழங்கியுள்ளது.
நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் (GDP) சுமார் 70 பில்லியன் கனேடிய டொலர்களைப் பங்களிக்கும் என எதிர்பார்க்கப்படும் இத்திட்டத்திற்கு மத்திய சுற்றுச்சூழல் அமைச்சகம் ஒப்புதல் அளித்துள்ளதாக, தாக்க மதிப்பீட்டு முகவரகம் (IAAC) உறுதிப்படுத்தியுள்ளது.
‘கனடா நிக்கல் கொம்பனி’ (Canada Nickel Company) நிறுவனத்திற்குச் சொந்தமான இச்சுரங்கம், ஒன்டாரியோவின் டிம்மின்ஸ் (Timmins) பகுதியில் அமைக்கப்படவுள்ளது.
2019ஆம் ஆண்டின் திருத்தப்பட்ட சுற்றுச்சூழல் தாக்கம் மதிப்பீட்டுச் சட்டத்தின் கீழ் (Impact Assessment Act) கூட்டாட்சி ஒப்புதலைப் பெறும் முதலாவது சுரங்கத் திட்டம் இதுவென்பது குறிப்பிடத்தக்கது. மின்சார வாகனங்களின் (EV) மின்கலங்கள், பாதுகாப்பு, விண்வெளித்துறை மற்றும் துருப்பிடிக்காத எஃகு தயாரிப்பிற்குத் தேவையான குறைந்த கார்பன் நிக்கல் மற்றும் கோபால்ட் ஆகிய முக்கிய தாதுக்களை இச்சுரங்கம் உற்பத்தி செய்யவுள்ளது.
சுமார் 41 ஆண்டுகள் வரை இயங்கும் என எதிர்பார்க்கப்படும் இத்திட்டம் மூலம், கட்டுமானக் காலத்தில் 5,000 தற்காலிக வேலைவாய்ப்புகளும், செயல்பாட்டுக் காலத்தில் 1,300 நிரந்தர வேலைவாய்ப்புகளும் உருவாக்கப்படும். நாளொன்றுக்கு 2,40,000 டன்கள் தாதுக்களை வெட்டி எடுக்கும் திறன் கொண்டதாக இச்சுரங்கம் அமையும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
உலகில் கண்டறியப்பட்ட இரண்டாவது மிகப்பெரிய நிக்கல் இருப்பைக் கொண்ட இப் பகுதியில், அதிநவீன ‘கார்பன் கனிமமயமாக்கல்’ (Carbon Mineralization) தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி குறைந்த அளவிலான கார்பன் உமிழ்வுடன், இந்த சுரங்கப் பணிகள் முன்னெடுக்கப்படவுள்ளன.











