அல்பெர்ட்டா (Alberta) மாகாணம் தனியாகப் பிரிந்து சுயாட்சி பெற்றாலும், அதன் பிரதான பொருளாதார ஆதாரமான கச்சா எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுவை அமெரிக்காவிற்கு ஏற்றுமதி செய்வதற்கு மீண்டும் கனடாவின் ஏனைய மாகாணங்களின் வழியேயுள்ள குழாய் வழிகளையே (Pipelines) சார்ந்திருக்க வேண்டியிருக்கும் என புதிய பொருளாதார பகுப்பாய்வு ஒன்று எச்சரித்துள்ளது.
அல்பெர்ட்டா மாகாணம் கனடாவில் இருந்து பிரிந்து தனிநாடாக இயங்குவது தொடர்பான விவாதங்கள் தீவிரமடைந்து வரும் நிலையில், இந்த புதிய பொருளாதார மற்றும் பூகோளவியல் பகுப்பாய்வுத் தகவல்கள் வெளியாகியுள்ளன.
கனடாவிலிருந்து அமெரிக்காவிற்கு கச்சா எண்ணெயைக் கொண்டு செல்லும் 6 பிரதான எல்லை தாண்டிய குழாய் வழிகளில், 3 குழாய்கள் மட்டுமே அல்பெர்ட்டா மாகாணத்திலிருந்து நேரடியாக அமெரிக்க எல்லைக்குள் நுழைகின்றன.
ஆனால், இவை கனடாவின் மொத்த எண்ணெய் ஏற்றுமதி திறனில் 10 சதவீதத்திற்கும் குறைவான அளவையே கொண்டு செல்லக்கூடியவை ஆகும்.
அல்பெர்ட்டாவின் எஞ்சிய பெரும்பான்மையான கச்சா எண்ணெய் ஏற்றுமதியானது பிரிட்டிஷ் கொலம்பியா (British Columbia) மற்றும் மானிட்டோபா (Manitoba) ஆகிய கனடிய மாகாணங்கள் வழியாகவே அமெரிக்காவிற்குச் செல்கின்றமை குறிப்பிடத்தக்கது.











