கியூபெக் மாகாணத்தின் மொன்றியல்-நார்த் (Montréal-Nord) பகுதியில் உள்ள 39-வது காவல் நிலையத்தில் பணியாற்றிய பொலிஸ் அதிகாரிகள் மீது முன்வைக்கப்பட்டுள்ள இனவெறி மற்றும் முறையற்ற நடத்தை தொடர்பான குற்றச்சாட்டுகள் குறித்து, மொன்றியல் பொலிஸ் தலைமை அதிகாரி ஃபாடி டாகர் (Fady Dagher) பொதுவெளியில் விளக்கம் அளித்துள்ளார்.
மொன்றியல் நகரத்தின் பொதுப் பாதுகாப்பு ஆணையத்தில் (Public Security Commission) நடைபெற்ற கூட்டத்தில், பாதிக்கப்பட்ட குடியிருப்பாளர்கள் மற்றும் பொதுமக்களின் கேள்விகளுக்கு அவர் பதிலளித்தார்.
கடந்த மார்ச் மாதமே தங்களுக்கு இது தொடர்பான புகார்கள் கிடைத்ததாகத் தெரிவித்த மொன்றியல் பொலிஸ் தலைமை அதிகாரி ஃபாடி டாகர் (Fady Dagher), உள்ளக அறிக்கைகள் மூலம் தகவலறிந்த உடனேயே விசாரணை தொடங்கப்பட்டதாக, குறிப்பிட்டுள்ளார்.
ஜூன் மாதம் 12 ஆம் திகதி அன்று 16 பேர் கொண்ட அந்த ரோந்துப் பிரிவு உடனடியாகக் கலைக்கப்பட்டதாகவும் அவர் கூறினார்.
குற்றம் சாட்டப்பட்ட அதிகாரிகளில் இதுவரை 3 பேர் பணியிலிருந்து இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளனர் எனவும் 3 அதிகாரிகள் நிர்வாகப் பணிகளுக்கு மாற்றப்பட்டுள்ளனர் எனவும் மொன்றியல் பொலிஸ் தலைமை அதிகாரி ஃபாடி டாகர் தெரிவித்துள்ளார்.
16 அதிகாரிகள் மீதும் குற்றம் சுமத்தப்படவில்லை என்றும், சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மீது விரிவான உள்ளக விசாரணை தொடர்ந்து நடைபெற்று வருவதாகவும் அவர் தெளிவுபடுத்தியுள்ளார்.











