நேபாளத்தில் நிலச்சரிவுடன் கூடிய பெருவெள்ளம் நாட்டின் திபெத் எல்லைப் பகுதியான ரசுவா மாவட்டத்தில் பெரும் சீற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.
மலையிலிருந்து பாய்ந்து வந்த மண் மற்றும் பாறைச் சுவர்கள் ஆற்று நீரில் சரிந்து விழுந்ததால், பாய்ந்த அசுர வெள்ளத்தில் சிக்கி 150-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர்.
இந்த பேரழிவில் பிதுர் பகுதியில் கழிப்பறை குழி தோண்டும் பணியில் ஈடுபட்டிருந்த 24 வயதான பிபேக் குமால் என்ற கூலித்தொழிலாளி சீறிப் பாய்ந்து வந்த சேற்று வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டு அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பியது பெரும் வியப்பை ஏற்படுத்தியுள்ளது.
வெள்ளத்தில் கட்டுக்கடங்காமல் அடித்துச் செல்லப்பட்ட பிபேக், வழியில் இருந்த ஒரு மாமரத்தின் கிளையை இறுக்கமாகப் பற்றிக் கொண்டு பல மணி நேரம் மரத்திலேயே தங்கிப் போராடியுள்ளார்.
பின்னர் மீட்புக் குழுவினரால் மீட்கப்பட்டு காத்மாண்டு தேசிய சிகிச்சை மையத்தில் அனுமதிக்கப்பட்ட அவர், “அந்த மாமரம் மட்டும் அங்கில்லை என்றால் நான் நிச்சயமாக உயிருடன் இருந்திருக்க முடியாது” என உருக்கமாகக் கூறியுள்ளார்.
தற்போது வெள்ளப் பாதிப்புகளில் 114-க்கும் மேற்பட்டோர் காயமடைந்து சிகிச்சை பெற்று வரும் நிலையில், இடிபாடுகளுக்குள் சிக்கியுள்ளவர்களை மீட்கும் பணியில் பாதுகாப்புப் படையினரும் மீட்புக் குழுவினரும் போர்க்கால அடிப்படையில் ஈடுபட்டு வருகின்றனர்.











