அமெரிக்காவின் புவேர்ட்டோ ரிக்கோவில் உள்ள சான் ஜுவான் நகரத்தில் இருந்து புறப்பட்ட அமேசான் நிறுவனத்தின் ‘பிரைம் ஏர்’ (Prime Air) சரக்கு விமானம், புளோரிடாவில் உள்ள மியாமி சர்வதேச விமான நிலையத்தில் தரையிறங்கும்போது கட்டுப்பாட்டை இழந்து விபத்துக்குள்ளானது.
’21 ஏர்’ நிறுவனத்தால் இயக்கப்பட்டு வந்த போயிங் 767 ரகத்தைச் சேர்ந்த இந்த விமானம், ஓடுபாதையின் எல்லையைத் தாண்டி அதிவேகமாகச் சென்று அருகிலிருந்த சாலையில் பயணித்த பல வாகனங்கள் மீது பலமாக மோதியது.
மோதிய வேகத்தில் விமானத்தில் தீப்பிடித்து அடர்ந்த கரும்புகை சூழத் தொடங்கியது.
இந்த கொடூர சம்பவத்தில் 5 பேர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர்.
மேலும் 5 பேர் பலத்த காயமடைந்த நிலையில், அவர்களில் 3 பேரின் நிலைமை மிகவும் கவலைக்கிடமாக உள்ளது.
விபத்தின் போது விமானத்தின் காக்பிட்டில் சிக்கிய விமானி மற்றும் துணை விமானி, மற்றும் வாகனங்களுக்குள் சிக்கியவர்களை மீட்புக் குழுவினர் நீண்ட போராட்டத்திற்குப் பிறகு மீட்டனர்.
மீட்புப் பணியில் 60-க்கும் மேற்பட்ட தீயணைப்பு வாகனங்கள் மற்றும் 200-க்கும் மேற்பட்ட வீரர்கள் ஈடுபட்டு, விமானத்தில் ஏற்பட்ட அபாயகரமான எரிபொருள் கசிவையும் தீயையும் கட்டுப்படுத்தினர்.
இச்சம்பவத்தைத் தொடர்ந்து மியாமி விமான நிலையத்தில் அனைத்து விமான சேவைகளும் உடனடியாக நிறுத்தப்பட்டு, 320-க்கும் மேற்பட்ட விமானங்கள் தாமதமடைந்தன மற்றும் பல விமானங்கள் ரத்து செய்யப்பட்டன.
32 ஆண்டுகள் பழமையான இந்த போயிங் விமானம் தரையிறங்கியபோது வீசிய பலத்த காற்றும், ஓடுபாதையில் வழக்கமான தூரத்தைத் தாண்டி விமானம் மிதந்து சென்றதுமே விபத்திற்குக் காரணம் எனக் முதற்கட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன.
சம்பவம் தொடர்பாக அமெரிக்க தேசிய போக்குவரத்து பாதுகாப்பு வாரியம் (NTSB) மற்றும் ஃபெடரல் விமானப் போக்குவரத்து நிர்வாகம் (FAA) ஆகியவை விசாரணையைத் தீவிரப்படுத்தியுள்ளன.











