60 ஆண்டுகளுக்கும் மேலாக அரைகுறையாக நிற்கும் 20-ஆம் இலக்க நெடுஞ்சாலை (Highway 20) திட்டத்தை உடனடியாக முழுமையாக்குமாறு கியூபெக் மாகாணத்தில் அமையவுள்ள அடுத்த அரசாங்கத்திற்கு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
கியூபெக் மாகாணத்தில் மொண்ட்ரியலுக்கு வெளியே அமைந்துள்ள 23 நகராட்சிகளைப் பிரதிநிதித்துவப்படுத்தும் உள்ளாட்சி மன்றத் தலைவர்கள், பிராந்திய வர்த்தகத் தலைவர்கள் மற்றும் பொதுமக்கள் இணைந்து இந்தக் கோரிக்கையை முன்வைத்துள்ளனர்.
கியூபெக் மாகாணத் தேர்தல் நடைபெறவுள்ள நிலையில், ஊடகவியலாளர் மாநாடு ஒன்றை நடத்திய பிராந்தியப் பிரதிநிதிகள், அடுத்த கியூபெக் உட்கட்டமைப்புத் திட்டத்தில் (PQI) இந்த நெடுஞ்சாலைப் பணிகளை இணைப்பது ஒரு “அரசியல் தீர்மானம்” என வலியுறுத்தினர்.
வாட்ரூய்-சோலாஞ்ச் (Vaudreuil-Soulanges) பிராந்தியப் பிரிவின் தலைவரும், ரிவியேர்-போடெட் (Rivière-Beaudette) நகரின் மேயருமான பட்ரிச் பூஸே (Patrick Bousez) கருத்துத் தெரிவிக்கையில், 2026-ஆம் ஆண்டிலும் கியூபெக்கில் இத்தகைய மூலோபாய முக்கியத்துவம் வாய்ந்த உட்கட்டமைப்பு நிறைவடையாமல் இருப்பது ஏற்றுக்கொள்ள முடியாதது எனக் குறிப்பிட்டுள்ளார்.
இந்த நெடுஞ்சாலையை அமைப்பதற்காகக் கியூபெக் அரசாங்கத்தால் 1960-களிலேயே நிலங்கள் கையகப்படுத்தப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.











