அரசுமுறைப் பயணமாக இங்கிலாந்து சென்றுள்ள முதலமைச்சர் விஜய் கொடியசைத்து தொடங்கி வைத்த லே மான்ஸ் கார் பந்தயப் போட்டியில், நடிகர் அஜித் குமாரின் அணி 3-ஆம் இடம் பிடித்து சாதனை படைத்துள்ளது.
தமிழ்நாட்டிற்குப் புதிய முதலீடுகளை ஈர்ப்பதோடு சர்வதேச விளையாட்டு உள்கட்டமைப்புகளையும் நேரில் பார்வையிடுவதற்காக முதலமைச்சர் விஜய் இங்கிலாந்து சென்றுள்ளார்.
அங்கு லண்டனில் நடைபெற்ற மிச்செலின் லீ மான்ஸ் தொடரில் நடிகர் அஜித் குமாரின் அணி பங்கேற்ற பந்தயத்தை முதலமைச்சர் விஜய் நேற்றைய தினம் கொடியசைத்து தொடங்கி வைத்தார்.
முதலமைச்சர் விஜய்க்கு அங்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்ட நிலையில், அவர் நடிகர் அஜித்தை ஆரத்தழுவி தனது அன்பை வெளிப்படுத்தினார்.
தொடர்ந்து, பார்வையாளர் பகுதியில் அமர்ந்து பந்தயத்தைக் கண்டுகளித்த முதலமைச்சருக்கு அஜித் நன்றி தெரிவித்தார்.
இந்த லே மான்ஸ் போட்டியில் சர்வதேச பந்தய வீரராகக் களம் கண்ட நடிகர் அஜித் குமார், LMP3 Pro/Am பிரிவில் ‘Ajith RedAnt by Virage’ அணியின் சார்பாக 16-ஆம் எண் கொண்ட ‘Ligier’ பந்தயக் காரை இயக்கினார்.
இவருடன் பிரான்ஸ் நாட்டைச் சேர்ந்த முன்னணி பந்தய வீரர் ரோமைன் வோஸ்னியாக் இணை காரோட்டியாகப் பங்கேற்றார்.
சுமார் 2 மணி நேரம் நடைபெற்ற இந்தச் விறுவிறுப்பான கார் பந்தயத்தின் முடிவில், அஜித்குமாரின் அணி 3-ஆம் இடத்தைக் கைப்பற்றி சாதனை படைத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.











