மத்திய மலைநாட்டில் தொடர்ச்சியாக பெய்து வரும் அடைமழை காரணமாக, பல முக்கிய நீர்த்தேக்கங்களில் நீர்மட்டம் அதிகரித்துள்ள நிலையில், பாதுகாப்பு நடவடிக்கையாக வான் கதவுகள் திறக்கப்பட்டுள்ளன.
மவுஸ்சாகலை நீர்த்தேக்கத்தின் இரண்டு வான் கதவுகள் தலா 3 அங்குலம் திறக்கப்பட்டு நீர் வெளியேற்றப்பட்டு வருகிறது.
இதன் தொடர்ச்சியாக, கீழ்மட்டத்தில் அமைந்துள்ள கென்யோன் நீர்த்தேக்கத்தின் இரண்டு வான் கதவுகளும், லக்சபான நீர்த்தேக்கத்தின் மூன்று வான் கதவுகளும் திறக்கப்பட்டுள்ளன.
மழைவீழ்ச்சியும் தொடர்ச்சியாக அதிகரித்து வரும் நிலையில், கடந்த 24ஆம் திகதி மவுஸ்சாகலை நீர்த்தேக்கப் பகுதியில் 126 மில்லிமீற்றர் மழைவீழ்ச்சி பதிவாகியுள்ளது.
அதேவேளை, காசல்ரீ நீர்ப்பிடிப்புப் பகுதிகளில் 97 மில்லிமீற்றர் மழைவீழ்ச்சி பதிவாகியுள்ளதுடன், காசல்ரீ நீர்த்தேக்கமும் தற்போது வான் பாயும் மட்டத்தை எட்டியுள்ளது.
நீர்த்தேக்கங்களில் மேலதிக நீரை சேமித்து வைக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளதால், வான் கதவுகள் ஊடாக நீர் வெளியேற்றப்பட்டு வருகிறது.
இதனால் நீர்த்தேக்கங்களின் கீழ்ப்பகுதிகள் மற்றும் தாழ்நிலப் பகுதிகளில் வசிக்கும் மக்கள் அவதானத்துடன் இருக்குமாறு நுவரெலியா மாவட்ட அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் அறிவுறுத்தியுள்ளது.
மேலும், நீர்த்தேக்கங்களிலிருந்து நீர் வெளியேற்றப்பட்டு வருவதால் களனி ஆற்றின் நீர்மட்டமும் உயர்வடைந்துள்ளதாக நுவரெலியா மாவட்ட அனர்த்த முகாமைத்துவப் பிரிவு தெரிவித்துள்ளது.











