பெர்முடாவில் இருந்து அமெரிக்காவின் பாஸ்டன் நகரை நோக்கிப் பயணித்தபோது அட்லாண்டிக் பெருங்கடலில் விபத்துக்குள்ளான கனடாவின் ஓன்டாரியோ மாகாணத்தைச் சேர்ந்த, Air Ambulance எனப்படும் மருத்துவ விமானத்தில் பயணித்தவர்களைத் தேடும் பணி தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டுள்ளது.
அமெரிக்கக் கடலோரக் காவல் படை இத்தீர்மானத்தை அறிவித்துள்ளது.
ஓன்டாரியோவை தளமாகக் கொண்ட ‘லேட்டிடியூட் ஏர் ஆம்புலன்ஸ்’ (Latitude Air Ambulance) நிறுவனத்திற்குச் சொந்தமான ‘கல்ஃப்ஸ்ட்ரீம் ஜி100‘ (Gulfstream G100) ரக சிறிய ஜெட் விமானம், பெர்முடாவில் இருந்து பாஸ்டன் நோக்கிப் பயணித்துக் கொண்டிருந்தபோது திடீரெனக் கட்டுப்பாட்டு மையத்துடனான தொடர்பை இழந்தது.
குறித்த விமானத்தில் கனடாவைச் சேர்ந்த இரண்டு விமானிகள், இரண்டு மருத்துவப் பணியாளர்கள் மற்றும் ஒரு நோயாளி, அவரின் உதவியாளர் என மொத்தம் ஆறு பேர் பயணித்துள்ளனர்.
விமானம் காணாமல்போனதைத் தொடர்ந்து, அமெரிக்காவின் மசாசூசெட்ஸ் மாகாணத்திலுள்ள நான்டாக்கெட் (Nantucket) கரையில் இருந்து, சுமார் 32 கிலோமீட்டர் தொலைவில் உள்ள கடற்பகுதியில் விமானத்தின் பாகங்கள் மற்றும் சிதைவுகள் மிதப்பதை, அமெரிக்காவின் கடலோரக் காவல் படையினர் கண்டறிந்தனர்.
எனினும், கடலில் மூழ்கியிருக்கலாம் எனக் கருதப்படும் விமானத்தில் பயணித்த ஆறு பேரைக் கண்டுபிடிக்கும் தீவிர முயற்சிகள் பலனளிக்காத நிலையிலேயே தேடுதல் பணி இடைநிறுத்தப்பட்டுள்ளது.











