தனியார் பால் நிறுவனங்கள் விற்பனை விலையை உயர்த்தியதைத் தொடர்ந்து, பொதுமக்கள் பெருமளவில் ஆவின் பாலை நாடத் தொடங்கியுள்ளதால் தற்காலிகமாகப் பால் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதாகப் பால்வளத்துறை அமைச்சர் விஜயலட்சுமி தெரிவித்துள்ளார்.
தமிழ்நாட்டில் ஆவின் பாலுக்கான கொள்முதல் விலை லிட்டருக்கு 6 ரூபாய் உயர்த்தப்பட்டதைத் தொடர்ந்து, தனியார் பால் நிறுவனங்களும் தங்கள் கொள்முதல் விலையை உயர்த்த வேண்டிய கட்டாயத்திற்குத் தள்ளப்பட்டன.
இதன் விளைவாக தனியார் நிறுவனங்கள் ஒரு லிட்டர் பாலை 80 ரூபாய் வரை உயர்த்திய போதிலும், ஆவின் நிறுவனம் தனது விற்பனை விலையை உயர்த்தாமல் ஒரு லிட்டர் பாலை 44 ரூபாய்க்கே வழங்கி வருகிறது.
விலை வித்தியாசத்தின் காரணமாகப் பெரும்பாலான நுகர்வோர் ஆவின் பாலைத் தேடி வருவதால் சந்தையில் பாலுக்கான தேவை அதிகரித்து, பற்றாக்குறை நிலவுவதாக அமைச்சர் குறிப்பிட்டார்.
அதேவேளை, ஆவினில் பால் கொள்முதல் மற்றும் மதிப்புக்கூட்டப்பட்ட பொருட்களின் உற்பத்தி அதிகரித்துள்ளதாகக் கூறிய அவர், தற்போது சென்னைக்கு நாளொன்றுக்கு 15 லட்சம் லிட்டர் பால் விநியோகிக்கப்பட்டு வருவதாகவும், நிலவும் தட்டுப்பாடு கூடிய விரைவில் சீரமைக்கப்படும் என்றும் உறுதியளித்துள்ளார்.











