இந்திய மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி மற்றும் காங்கிரஸ் கட்சியின் பொதுச்செயலாளர் பிரியங்கா காந்தி வத்ரா ஆகியோரை, டெல்லி பொலிஸார் மீண்டும் கைது செய்து அழைத்துச் சென்று விடுவித்துள்ளனர்.
இந்தியத் தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமாருக்கு எதிராக எதிர்க்கட்சிகளின் ‘இந்தியா’ (INDIA) கூட்டணி நடத்தி வரும் போராட்டம் இரண்டாவது நாளாகத் தீவிரமடைந்துள்ள நிலையிலேயே இந்தக் கைது நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
வாக்காளர் பட்டியல் திருத்தப் பணிகளில் முறைகேடுகள் இடம்பெற்றுள்ளதாகக் குற்றம்சாட்டி, இந்தியாவின் தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமார் உடனடியாகப் பதவி விலக வேண்டும் என வலியுறுத்தி, இந்திய நாடாளுமன்றத்தின் எதிர்க்கட்சி உறுப்பினர்கள் டெல்லியில் தீவிர போராட்டங்களை முன்னெடுத்து வருகின்றனர்.
போராட்டத்தின் இரண்டாம் நாளான இன்று, டெல்லி ஜன்பாத் வீதியிலுள்ள உணவகமொன்றில் காங்கிரஸ் கட்சித் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே அளித்த மதிய உணவு உபசரிப்பில் ராகுல் காந்தி மற்றும் ‘இந்தியா’ கூட்டணிக் கட்சிகளின் பிரதிநிதிகள் கலந்துகொண்டனர்.
இதனைத் தொடர்ந்து, சுமார் 300 நாடாளுமன்ற எதிர்க்கட்சி உறுப்பினர்கள் பேருந்துகளில் ஜந்தர் மந்தர் நோக்கிப் பேரணியாகப் புறப்பட்டனர்.
இந்திய தேர்தல் ஆணையத்தின் செயல்பாடுகளுக்குப் பின்னணியில் நாட்டின் பிரதமர் நரேந்திர மோடியே உள்ளதாகவும், ஞானேஷ் குமார் பதவி விலகும் வரை தங்களது போராட்டம் ஓயாது எனவும் ராகுல் காந்தி ஊடகங்களிடம் தெரிவித்தார்.
எதிர்க்கட்சியினரின் பேரணியைத் தடுப்பதற்காக விண்ட்சர் பிளேஸ் பகுதியில் டெல்லி பொலிஸார் பலத்த வீதித் தடைகளை ஏற்படுத்தியிருந்தனர்.
பேருந்துகள் வழிமறிக்கப்பட்டதைத் தொடர்ந்து, இந்திய நாடாளுமன்ற உறுப்பினர்களும் ஆயிரக்கணக்கான காங்கிரஸ் கட்சித் தொண்டர்களும் வீதிகளில் இறங்கிப் போராட்டத்தில் ஈடுபட்டமை குறிப்பிடத் தக்கது.











