கச்சத்தீவு மற்றும் இரு நாடுகளுக்கும் இடையிலான கடல் எல்லை தொடர்பான விவகாரம் குறித்து இந்திய உச்சநீதிமன்றத்தில் நடைபெற்ற விசாரணையின்போது, இலங்கை கடற்பரப்பிற்குள் நுழைந்து மீன்பிடிப்பதைத் தவிர்க்கும் வகையில் தமிழக மீனவர்களுக்கு உரிய விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டியதன் அவசியம் தொடர்பில் நீதிமன்றம் தெரிவித்துள்ள அவதானிப்புகள் வரவேற்கத்தக்கவை என கடற்றொழில் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் அவர் விடுத்துள்ள ஊடக அறிக்கையில், கச்சத்தீவை இலங்கையிடம் இருந்து மீளப் பெற வேண்டும் எனக் கோரி தாக்கல் செய்யப்பட்ட மனுக்கள் தொடர்பான விசாரணையின்போதே, இந்திய உச்சநீதிமன்ற நீதியரசர் சஞ்சய் குமார் தலைமையிலான அமர்வு, தமிழக மீனவர்கள் சர்வதேச கடல் எல்லையைத் தாண்டி இலங்கை கடற்பரப்பிற்குள் நுழைந்து மீன்பிடிப்பதைத் தவிர்க்கும் வகையில் அவர்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டியதன் அவசியத்தைச் சுட்டிக்காட்டியுள்ளதாகக் குறிப்பிட்டுள்ளார்.
இலங்கையின் கடல் வளங்களையும் கடல் சூழலையும் பாதுகாப்பது எமது அரசாங்கத்தின் முக்கிய பொறுப்பாகும் எனத் தெரிவித்துள்ள அமைச்சர், எமது கடற்பரப்பில் சட்டவிரோதமான மற்றும் அழிவை ஏற்படுத்தக்கூடிய மீன்பிடி நடவடிக்கைகளுக்குத் தொடர்ந்தும் எதிர்ப்பு தெரிவித்து வருவதாகவும் சுட்டிக்காட்டியுள்ளார்.
இலங்கை கடற்பரப்பிற்குள் அத்துமீறி நுழையும் வெளிநாட்டு மீன்பிடிப் படகுகள், குறிப்பாக அடித்தளத்தை அழிக்கும் வகையிலான மீன்பிடி முறைகள், எமது வடக்கு மாகாணத்தைச் சேர்ந்த மீனவர்களின் வாழ்வாதாரத்தையும் கடல் வளங்களையும் பாதிக்கின்றன.
எனவே, சர்வதேச கடல் எல்லையை மதிப்பதும், ஒவ்வொரு நாட்டினதும் கடல் வளங்கள் மற்றும் மீனவர்களின் வாழ்வாதார உரிமைகளைப் பாதுகாப்பதும் இரு நாடுகளுக்கும் இடையிலான நல்லுறவை மேலும் வலுப்படுத்துவதற்கு அவசியமானதாகும் என அவர் தனது அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.
மேலும், கச்சத்தீவு தொடர்பான 1974ஆம் ஆண்டு இந்தியா – இலங்கை ஒப்பந்தமும், 1976ஆம் ஆண்டு கடல் எல்லை மற்றும் மீன்பிடி தொடர்பான ஏற்பாடுகளும் இரு நாடுகளுக்கும் இடையிலான நீண்டகால இராஜதந்திர புரிந்துணர்வின் அடிப்படையில் அமைந்துள்ளன என்றும், இந்த விடயத்தில் இலங்கையின் நிலைப்பாடு தெளிவானது என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
அத்துடன், மீனவர்களின் வாழ்வாதாரத்தைப் பாதுகாப்பதுடன் கடல் வளங்களையும் பாதுகாக்கும் வகையில், இரு நாடுகளுக்கும் இடையிலான கலந்துரையாடல்கள் மற்றும் இராஜதந்திர வழிமுறைகள் மூலம் நீடித்த தீர்வுகளை நோக்கி முன்னேறுவது முக்கியமானது என்றும் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர் சுட்டிக்காட்டியுள்ளார்.











