நவராத்திரி பண்டிகையை முன்னிட்டு, யாழ்ப்பாணம் கோண்டாவில் பகுதியில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட பொம்மைகளைக் கொண்டு அமைக்கப்பட்டுள்ள பிரம்மாண்டமான நவராத்திரி கொலு, பார்வையாளர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது.
கோண்டாவில் ஈழத்து சபரிமலை ஐயப்பன் ஆலயத்தின் பிரதம குருவான ஹரிஹர சுதக் குருக்களின் இல்லமான ‘சாய் சபரீசன் இல்லத்தில்’ இந்த நவராத்திரி கொலு அமைக்கப்பட்டுள்ளது.
இங்கு இறைத் திருவுருவங்கள், புராண இதிகாசக் கதைகள், வரலாற்றுச் சம்பவங்கள் மற்றும் பலரும் அறிந்திராத அரிய தகவல்கள் எனப் பல்வேறு அம்சங்கள் பொம்மைகள் மூலம் தத்ரூபமாகக் காட்சிப்படுத்தப்பட்டுள்ளன.
ஆயிரத்திற்கும் மேற்பட்ட பொம்மைகளைக் கொண்டு நேர்த்தியாகவும் கலைநயத்துடனும் உருவாக்கப்பட்டுள்ள இந்தக் கொலு, பார்வையாளர்களுக்கு வியப்பூட்டும் அனுபவத்தை வழங்குவதுடன், தமிழர் பண்பாடு, பாரம்பரியம், ஆன்மிகம் மற்றும் வரலாற்றின் சிறப்புகளையும் எடுத்துரைக்கிறது.
இந்த நவராத்திரி கொலுவைத் தொடர்ந்து ஒன்பது நாட்களுக்கு பொதுமக்கள் நேரில் சென்று பார்வையிட முடியும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், மாலை நேரங்களில் நடைபெறும் கும்ப பூஜைகளிலும் பக்தர்கள் கலந்துகொண்டு அம்பிகையின் அருளைப் பெற்றுக்கொள்ள முடியும் என அறிவிக்கப்பட்டுள்ளது.











