சீனாவுடன் இராஜதந்திர மற்றும் பொருளாதார உறவுகளை மேம்படுத்துவதற்கான முயற்சிகள் தொடர்ச்சியாக முன்னெடுக்கப்பட்டு வருவதாக இந்திய மத்திய அமைச்சர் பியூஷ் கோயல் தெரிவித்துள்ளார்.
அதேவேளை, அமெரிக்காவுடனான உத்தேச இருதரப்பு வர்த்தக ஒப்பந்தம் தொடர்பான பேச்சுவார்த்தைகள் ஒரு இறுதி உடன்பாட்டை எட்டும் நிலையை நெருங்கியுள்ளதாக இந்திய வெளிவிவகார அமைச்சர் எஸ். ஜெய்சங்கர் தெரிவித்துள்ளார்.
புதுடெல்லியில் நடைபெற்ற ப்ளூம்பெர்க் புதிய பொருளாதார மன்றத்தில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே அமைச்சர்கள் இருவரும் இந்தத் தகவல்களைப் பகிர்ந்துள்ளனர்.
சீனாவுடனான தற்போதைய உறவுகள் குறித்துக் கருத்துத் தெரிவித்த வர்த்தக மற்றும் தொழில்துறை அமைச்சர் பியூஷ் கோயல், இரு நாடுகளுக்கும் இடையிலான உறவுகளை வலுப்படுத்துவதற்கான நடவடிக்கைகள் தொடர்ந்து முன்னெடுக்கப்பட்டு வருவதாகத் தெரிவித்தார்.
எனினும், இது தொடர்பான இறுதி முடிவு இன்னும் முழுமையாக எட்டப்படவில்லை என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.
இந்தியாவுக்கும் சீனாவுக்கும் இடையிலான பொருளாதார உறவுகள் மற்றும் வர்த்தக ஏற்றத்தாழ்வுகள் குறித்து கருத்துத் தெரிவிக்கும்போதே அமைச்சர் பியூஷ் கோயல் இந்தக் கருத்தைக் கூறினார்.
இதற்கிடையில், அமெரிக்காவுடன் முன்னெடுக்கப்படும் வர்த்தகப் பேச்சுவார்த்தைகள் குறித்துப் பேசிய வெளிவிவகார அமைச்சர் எஸ். ஜெய்சங்கர், இரு நாடுகளுக்கும் இடையிலான வர்த்தக ஒப்பந்தம் தொடர்பில் சாதகமான முன்னேற்றங்கள் ஏற்பட்டுள்ளதாகவும், பேச்சுவார்த்தைகள் தற்போது இறுதி முடிவை நோக்கி நகர்ந்து வருவதாகவும் தெரிவித்தார்.
உலகளாவிய பொருளாதார மாற்றங்கள் மற்றும் பிராந்திய பாதுகாப்புச் சூழலைக் கருத்திற்கொண்டு இந்தியா தனது வெளியுறவுக் கொள்கைகளையும் பொருளாதாரக் கூட்டாண்மைகளையும் சமநிலைப்படுத்தி வருவதாக, இந்த மன்றத்தில் பேசப்பட்டமை குறிப்பிடத்தக்கது.











