கனடாவின் நியூ பிரன்சுவிக் மாகாணத்தின் முற்போக்கு பழமைவாதக் கட்சிக்கு புதிய தலைவர் இன்று தெரிவுசெய்யப்படவுள்ளார்.
இதற்கான தலைமைப் போட்டியில் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் டேனியல் அல்லெய்ன் மற்றும் தற்போதைய எதிர்க்கட்சியின் நிதி விவகார விமர்சகரான டான் மோனஹான் ஆகிய இருவர் போட்டியிடுகின்றனர்.
ஃபிரடெரிக்டன் மாநாட்டு மையத்தில் இன்று நடைபெறும் கட்சியின் தலைமைத் தெரிவு நிகழ்வில், தபால் மூலம் பதிவுசெய்யப்பட்ட வாக்குகளின் முடிவு அறிவிக்கப்படவுள்ளது. உள்ளூர் நேரப்படி மாலை 4.45 மணியளவில் முடிவை அறிவிக்கத் திட்டமிட்டுள்ளதாகக் கட்சி தெரிவித்துள்ளது. மாநாட்டில் புதிதாக வாக்களிப்பு இடம்பெறாது.
2024ஆம் ஆண்டு மாகாணத் தேர்தலில் முற்போக்கு பழமைவாதக் கட்சி தோல்வியடைந்ததைத் தொடர்ந்து, அக்கட்சியின் தலைவராகவும் மாகாண முதல்வராகவும் இருந்த பிளெய்ன் ஹிக்ஸ் பதவி விலகினார். அதன்பின்னர் கட்சி இடைக்காலத் தலைமையின் கீழ் இயங்கி வருகிறது.
இந்நிலையில், புதிய தலைவரைத் தெரிவுசெய்வதற்கான போட்டி கட்சிக்குள் பல்வேறு கருத்து வேறுபாடுகளை வெளிப்படுத்தியுள்ளது.
டேனியல் அல்லெய்ன் கட்சியின் தற்போதைய மற்றும் முன்னாள் அரசியல் பிரதிநிதிகள் உள்ளிட்ட பலரின் ஆதரவைப் பெற்றுள்ளார். எனினும், 2023ஆம் ஆண்டு மாகாணப் பாடசாலைகளில் பாலின அடையாளம் தொடர்பான பிரதிப்பெயர்களைப் பயன்படுத்துவது குறித்து முன்வைக்கப்பட்ட சர்ச்சைக்குரிய கொள்கைக்கு எதிராக, எதிர்க்கட்சியான லிபரல் உறுப்பினர்களுடன் இணைந்து வாக்களித்த ஆறு முற்போக்கு பழமைவாத சட்டமன்ற உறுப்பினர்களில் அவரும் ஒருவர் என்பதால், சில கட்சி உறுப்பினர்கள் அவரை விமர்சித்துள்ளனர்.
மறுபுறம், டான் மோனஹான் முன்னாள் முதல்வர் பிளெய்ன் ஹிக்ஸுடன் அரசியல் நிலைப்பாடுகளில் நெருக்கமாக இருப்பதாக அரசியல் ஆய்வாளர்கள் குறிப்பிடுகின்றனர்.
புதிய தலைவரின் முக்கியப் பணிகளில் ஒன்றாக, கட்சிக்குள் நிலவும் கருத்து வேறுபாடுகளைக் களைந்து உறுப்பினர்களை ஒன்றிணைப்பது இருக்கும் என அரசியல் பார்வையாளர்கள் தெரிவிக்கின்றனர்.
இன்று அறிவிக்கப்படவுள்ள தலைமைத் தேர்தல் முடிவு, நியூ பிரன்சுவிக் மாகாண அரசியலில் முற்போக்கு பழமைவாதக் கட்சியின் அடுத்தகட்டப் பயணத்தைத் தீர்மானிக்கும் முக்கிய நிகழ்வாகக் கருதப்படுகிறது.











