கனடாவின் அல்பர்டா மாகாணத்தின் கிழக்கு மத்திய பகுதியில் அமைந்துள்ள வெயின்ரைட் கனேடியப் படைத்தளத்தின் பயிற்சிப் பகுதியில், சனிக்கிழமை ஏற்பட்ட பாரிய தீ விபத்தில் பலர் உயிரிழந்துள்ளதுடன், பலர் காயமடைந்துள்ளதாக கனேடிய ஆயுதப்படை தெரிவித்துள்ளது.
உள்ளூர் நேரப்படி மாலை சுமார் 4 மணியளவில் ஏற்பட்ட தீ, பலத்த காற்றின் காரணமாக வேகமாகப் பரவி பயிற்சிப் பகுதியையும் தாண்டியுள்ளது.
உயிரிழப்புகளையும் காயங்களையும் தேசிய பாதுகாப்பு அமைச்சர் டேவிட் மெக்கின்டி உறுதிப்படுத்தியுள்ளார்.
அண்மைக் காலத்தில் தனது நினைவுக்கு எட்டிய மிக மோசமான, பெருமளவு உயிரிழப்புகளையும் காயங்களையும் ஏற்படுத்திய சம்பவம் இது என அவர் தெரிவித்துள்ளார். பாதிக்கப்பட்டவர்களின் நெருங்கிய உறவினர்களுக்கு அறிவிக்கப்பட்ட பின்னரே மேலதிக விவரங்கள் வெளியிடப்படும் என கனேடிய ஆயுதப்படை கூறியுள்ளது.
அதிக எண்ணிக்கையிலான நோயாளிகளுக்கான அவசர சிகிச்சைகளை ஒருங்கிணைப்பதற்காக மருத்துவமனைகளில் “கோட் ஒரேஞ்ச்”(Code Orange) நடைமுறை அறிவிக்கப்பட்டது.
எட்மன்டன் ரோயல் அலெக்சாண்ட்ரா மருத்துவமனையின் அவசர சிகிச்சைப் பிரிவு மருத்துவர் வாரன் திர்ஸ்க், இது 15 முதல் 25 ஆண்டுகளுக்கு ஒருமுறை எதிர்கொள்ளக்கூடிய அளவிலான பேரிடர் என விவரித்துள்ளார்.
தீ விபத்துக்கான காரணம் இதுவரை தெளிவாகவில்லை. மீட்பு மற்றும் அவசர நடவடிக்கைகளுக்கு உதவுவதற்காக கனேடிய ரோயல் மவுண்டட் பொலிஸார் வளங்களை அனுப்பியுள்ளனர்.
சஸ்கட்செவான் மாகாணமும் உதவிகளை அனுப்பியுள்ளதுடன், பிரிட்டிஷ் கொலம்பியா மாகாணமும் ஆதரவு வழங்க முன்வந்துள்ளது. பிரதமர் மார்க் கார்னி இதனை பாரதூரமான சம்பவம் எனக் குறிப்பிட்டுள்ளார். அல்பர்டா முதல்வர் டேனியல் ஸ்மித், பெரும் துயரத்தை ஏற்படுத்திய பாரிய தீ விபத்து எனத் தெரிவித்துள்ளார்.
வெயின்ரைட் நகர மேயர் புரூஸ் பியூ கூறுகையில், தீ படைத்தளத்தின் வேலியைத் தாண்டியபோதிலும், தீயணைப்புக் குழுவினர் அதனைக் கட்டுப்படுத்தும் பணியில் ஈடுபட்டுள்ளதாகத் தெரிவித்துள்ளார். உள்ளூர் மருத்துவமனை, பாதிக்கப்பட்டவர்களின் நிலையை மதிப்பிட்டு சிகிச்சைக்கு முன்னுரிமை வழங்கும் மையமாகச் செயற்படுவதாகவும் அவர் கூறியுள்ளார்.
உயிருடன் பயன்படுத்தப்படும் வெடிமருந்துகள் மற்றும் ஆயுதங்களைக் கொண்ட பயிற்சிகளுக்கான கனேடிய ஆயுதப்படையின் முக்கியத் தளமாக வெயின்ரைட் விளங்குகிறது. இங்கு காலாட்படை, பீரங்கிப்படை மற்றும் வான்படை ஆதரவு இணைந்த பயிற்சிகள் நடைபெறுகின்றன.
ஞாயிற்றுக்கிழமை(18.10.2026) அதிகாலை அறிக்கை வெளியிட்ட கனேடியப் பாதுகாப்புப் படைகளின் தலைமைத் தளபதி ஜெனரல் ஜென்னி கரின்யான், பாதிக்கப்பட்டவர்கள் மற்றும் அவர்களது குடும்பத்தினருக்கு ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துள்ளார்.











