மொண்ட்ரியல் நகரில் உள்ள செயிண்ட்-மிக்கேல் (Saint-Michel) பகுதியில் நான்கு மாடிக் கட்டிடத்தில் ஏற்பட்ட திடீர் தீ விபத்தில், சுமார் 150 தீயணைப்பு வீரர்கள் போராடி தீயைக் கட்டுப்படுத்தியுள்ளனர்.
கிரேமாசி கிழக்கு (Crémazie E.) மற்றும் செயிண்ட்-மிக்கேல் பெருவழிச் சாலைகள் சந்திப்புப் பகுதியில் அமைந்துள்ள இந்தக் கட்டிடத்தில் இந்தத் தீ விபத்து குறித்து அவசரத் தகவல் கிடைக்கப்பெற்றதாக மொண்ட்ரியல் தீயணைப்புத் துறை தெரிவித்துள்ளது.
சம்பவ இடத்திற்கு உடனடியாக விரைந்த தீயணைப்பு வீரர்கள், ஆபத்தான நிலையில் பால்கனிகளில் சிக்கியிருந்த பலரைத் தீவிரமாகப் போராடி மீட்டுள்ளனர்.
புகைமூட்டத்தில் சிக்கி லேசான காயமடைந்த மூன்று நபர்கள் சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டதாக தீயணைப்புத் துறை பிரிவுத் தலைவர் பிரான்சிஸ் ப்ளூரி (Francis Fleury) தெரிவித்தார்.
இந்த விபத்து நிகழ்ந்த கட்டிடத்தின் தரை தளத்தில் கடைகளும், ஒரு பகல்நேரக் காப்பகமும் (daycare) இயங்கி வருகின்றன.
எனினும், காப்பகத்திலிருந்த அனைத்து 70 குழந்தைகளும் எத்தகைய காயமுமின்றி பத்திரமாக மீட்கப்பட்டு வெளியேற்றப்பட்டதாக அதிகாரிகள் உறுதிப்படுத்தியமை குறிப்பிடத்தக்கது.











