மட்டக்களப்பு கடலில் கடற்படையினரால் கைப்பற்றப்பட்ட சட்டவிரோத சுருக்கு வலைகளை மீண்டும் உரிமையாளர்களிடம் ஒப்படைத்துவிட்டு, அதற்குப் பதிலாகப் பழைய மற்றும் சிறிய வலைகளை நீதிமன்றத்தில் சமர்ப்பித்து, நீதிமன்றத்தைத் தவறாக வழிநடத்தியதாக கடற்றொழில் நீரியல் வளத் திணைக்களத்தின் சில உத்தியோகத்தர்கள் மீது குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டுள்ளது.
மட்டக்களப்பு ஊழல் மோசடி மற்றும் போதைப்பொருளுக்கு எதிரான அமைப்பின் ஊடகப் பேச்சாளர் அந்தனிசில் ராஜ்குமார் இந்தக் குற்றச்சாட்டுகளை முன்வைத்துள்ளார்.
குறித்த அமைப்பின் ஊடக மாநாடு இன்று (14) புதன்கிழமை, அமைப்பின் தலைவரும் ஓய்வுபெற்ற கிராம உத்தியோகத்தருமான முத்துலிங்கம் தலைமையில் நடைபெற்றது.
இதன்போது கருத்துத் தெரிவித்த அந்தனிசில் ராஜ்குமார், கடந்த முதலாம் திகதி பாலமுனை மற்றும் பூநொச்சிமுனை கடற்பகுதிகளில் சட்டவிரோத சுருக்கு வலைகளைப் பயன்படுத்தி மீன்பிடிப்பதாகக் கிடைத்த தகவலையடுத்து, கல்லடி கடற்படை முகாமைச் சேர்ந்த கடற்படையினர் சுமார் 50 இலட்சம் ரூபாவுக்கும் அதிக பெறுமதியான ஐந்து சுருக்கு வலைகளைக் கைப்பற்றியதாகத் தெரிவித்தார்.
கைப்பற்றப்பட்ட வலைகள் மறுநாள், அதாவது இரண்டாம் திகதி, மட்டக்களப்பு கடற்றொழில் நீரியல் வளத் திணைக்கள அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்டதாகவும், பின்னர் அவற்றுக்குப் பதிலாகப் பழைய மற்றும் சிறிய வலைகளை நீதிமன்றத்தில் சமர்ப்பித்ததாகவும் அவர் குற்றஞ்சாட்டினார்.
மேலும், குறித்த வலைகளை மீண்டும் உரிமையாளர்களிடம் ஒப்படைப்பதற்காக மூவரிடமிருந்து முறையே நான்கு இலட்சம், இரண்டு இலட்சம் மற்றும் இரண்டு இலட்சம் ரூபா என மொத்தம் எட்டு இலட்சம் ரூபா இலஞ்சமாகப் பெறப்பட்டதாகவும் அவர் தெரிவித்தார்.
அத்துடன், பூநொச்சிமுனை மற்றும் நொச்சிமுனை பகுதிகளில் சட்டவிரோத சுருக்கு வலைகளைப் பயன்படுத்தும் மீன்பிடியாளர்களிடமிருந்து குறிப்பிட்ட தொகைகள் தொடர்ந்து பெறப்படுவதாகவும் குற்றஞ்சாட்டினார்.
2024ஆம் ஆண்டில் சட்டவிரோத சுருக்கு வலைகள் வைக்கப்பட்டிருந்த கொட்டகை ஒன்றைக் கைப்பற்றிய பின்னர், அதனை நீதிமன்றத்தில் ஒப்படைக்காமல் கிண்ணியாவைச் சேர்ந்த ஒருவருக்கு விற்பனை செய்ததாகவும் அவர் மேலும் குற்றஞ்சாட்டினார்.
இவ்வாறான நடவடிக்கைகள் மட்டக்களப்பின் கடல் வளங்களையும் மீன் வளத்தையும் பாதிப்பதாகக் குறிப்பிட்ட அவர், தமது அமைப்பிடம் எழுத்துமூல ஆவணங்கள் இருப்பதாகவும், இந்த விவகாரத்தை உரிய அதிகாரிகள் மற்றும் கடற்றொழில் அமைச்சரின் கவனத்துக்குக் கொண்டுசெல்லவுள்ளதாகவும் தெரிவித்தார்.
குறித்த குற்றச்சாட்டுகள் தொடர்பில் விசாரணை நடத்தி, சம்பந்தப்பட்டவர்கள் மீது சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும், கடற்றொழில் நீரியல் வளத் திணைக்களப் பணிப்பாளர் விசேட விசாரணைக் குழுவொன்றை நியமிக்க வேண்டும் எனவும் அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.











