கனடாவில் புற்றுநோய் மருந்துகளின் விலை அதிகரித்து வருகின்றமையால், அங்குள்ள நோயாளிகளுக்கும் சுகாதாரத் துறையினருக்கும் பெரும் சவாலாக மாறியுள்ளது.
வான்கூவரைச் சேர்ந்த ஜேம்ஸ் ஹோவர்ட் என்பவர், தனது வாழ்நாளை நீட்டிக்கும் என நம்பும் புதிய கணையப் புற்றுநோய் மருந்தைப் பெறுவதற்காக மாதத்திற்கு சுமார் 90 ஆயிரம் கனடிய டொலர்களைச் செலவிட வேண்டிய நிலையை எதிர்கொண்டுள்ளார்.
கடந்த 2025ஆம் ஆண்டு நவம்பர் மாதம் அவருக்குக் கணையப் புற்றுநோய் இருப்பது கண்டறியப்பட்டது. இதற்காக அவர் கீமோதெரபி சிகிச்சை பெற்றபோதிலும், பின்னர் புற்றுநோய் உடலின் ஏனைய பகுதிகளுக்கும் பரவியதால், தற்போது நான்காம் கட்டத்தை எட்டியுள்ளது.
இந்த ஆண்டின் தொடக்கத்தில், டாராக்சோன்ராசிப் (Daraxonrasib) என்ற புதிய மருந்து சிகிச்சை குறித்து அவர் அறிந்துகொண்டார். இந்த மருந்தைத் தினமும் மூன்று வேளைகள் எடுத்துக்கொள்வதற்கான செலவு மாதத்திற்கு சுமார் 63 ஆயிரம் அமெரிக்க டொலர்களாகவும், கனடிய நாணயத்தில் சுமார் 90 ஆயிரம் டொலர்களாகவும் இருப்பதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
குறித்த மருந்து அமெரிக்காவில் அங்கீகரிக்கப்பட்டுள்ளதாகவும், கனடாவில் இன்னும் அங்கீகாரம் பெறவில்லை என்றும் கூறப்படுகின்றது.
இந்தப் பிரச்சினையை எதிர்கொள்ளும் ஒரே நோயாளி ஹோவர்ட் அல்ல. கனடா முழுவதும் உள்ள புற்றுநோய் நிபுணர்கள், அதிக விலையுள்ள புதிய மருந்துகள் நோயாளிகளைப் பெரும் பொருளாதார நெருக்கடிக்குள் தள்ளுவதாக எச்சரிக்கின்றனர்.
குறிப்பாக, கனடாவில் அங்கீகரிக்கப்படாத அல்லது அரச நிதியுதவி கிடைக்காத சிகிச்சைகளைப் பெற விரும்புவோர், தங்களது சொந்தப் பணத்தைச் செலவிட வேண்டிய நிலை ஏற்படுகிறது.
இதன்போது 20க்கும் மேற்பட்ட புற்றுநோய் நிபுணர்கள், இத்தகைய விலை உயர்வுகள் நோயாளிகள் மீதும் பொதுச் சுகாதாரக் கட்டமைப்பு மீதும் அதிகரித்த அழுத்தத்தை ஏற்படுத்துவதாகக் குறிப்பிட்டுள்ளனர்.
ஒன்ராறியோவின் கிங்ஸ்டனில் பணியாற்றும் மருத்துவப் புற்றுநோய் நிபுணர் டாக்டர் கிறிஸ்டோபர் பூத், மருந்து நிறுவனங்கள் இலாபம் ஈட்டுவதற்கு எதிரான நிலைப்பாடு தமக்கில்லை என்றாலும், மருந்துகளின் விலைகள் நோயாளிகளுக்கும் சுகாதார அமைப்புகளுக்கும் பாதிப்பை ஏற்படுத்தும் அளவுக்கு அதிகரித்துள்ளதாகத் தெரிவித்துள்ளார்.











