ஸ்பெயினில் அதிவேக எக்ஸ்பிரஸ் ரயில் ஒன்று நின்றுகொண்டிருந்த மற்றொரு ரயிலுடன் மோதி ஏற்பட்ட கோர விபத்தில் குறைந்தது 68 பேர் உயிரிழந்துள்ளதுடன் 80 பேர் காயமடைந்துள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
மட்ரிட் நகருக்கு தெற்கே அமைந்துள்ள உர்தா (Urda) பகுதியில் புதன்கிழமை காலை 9 மணியளவில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.
கணினித் தகவல் தொடர்பு கோளாறு காரணமாக சிவப்பு சிக்னல் விழுந்து போக்குவரத்து தானாகவே நிறுத்தப்பட்டிருந்த நிலையில், தவறான தீர்மானத்தின் காரணமாக ரென்ஃபே (Renfe) ரயில் செல்ல அனுமதி அளிக்கப்பட்டதே விபத்துக்குக் காரணம் என போக்குவரத்து அமைச்சர் ஆஸ்கார் புவாண்டே தெரிவித்துள்ளார்.
இதனையடுத்து, பயணத்தை தொடர்ந்த ரென்ஃபே ரயில், அங்கே நின்றுகொண்டிருந்த இரியோ (Iryo) ரயிலுடன் மோதியுள்ளது.
இவ்விபத்தின் போது இரியோ ரயிலில் 147 பேரும், ரென்ஃபே ரயிலில் 397 பேரும் பயணித்துள்ளனர்.
விபத்தில் குறைந்தது 3 பெட்டிகள் சரிவில் விழுந்து நொறுங்கியுள்ளன.
காயம் அடைந்த 80 பேரில் 15 பேரின் நிலைமை மிகவும் கவலைக்கிடமாக உள்ளதாக சுகாதார அமைச்சர் மோனிகா கார்சியா தெரிவித்துள்ளார்.
மீட்புப் பணிகள் தொடர்வதால் உயிரிழப்புகள் மேலும் அதிகரிக்கக்கூடும் என அஞ்சப்படுகிறது.
இந்தத் துயரச் சம்பவம் குறித்து விசாரணை நடத்தப்படும் என்றும், தவறு கண்டறியப்பட்டால் பாதுகாப்பு நடவடிக்கைகள் மேலும் பலப்படுத்தப்படும் என்றும் பிரதமர் பெட்ரோ சான்செஸ் உறுதியளித்துள்ளார்.
இச்சம்பவத்தை அடுத்து அடுத்த மாதம் நடைபெறவுள்ள தேர்தலுக்கான அனைத்துப் பிரச்சார நிகழ்வுகளையும் எதிர்க்கட்சியான பீப்பிள்ஸ் கட்சி ரத்து செய்துள்ளது.
ஸ்பெயினில் இந்த ஆண்டில் இடம்பெற்ற இரண்டாவது முக்கிய ரயில் விபத்து இதுவாகும்.
கடந்த ஜனவரி மாதம் இதே பாதையில் இடம்பெற்ற விபத்தில் 46 பேர் உயிரிழந்தமை குறிப்பிடத்தக்கது.
இந்த விபத்துக்கான காரணம் குறித்து விரிவான விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.











