மஹியங்கனை பகுதியில் சட்டவிரோத விற்பனைக்காகப் பாதுகாக்கப்பட்ட வனவிலங்குகளின் உடல் பாகங்களைப் பெருமளவில் வைத்திருந்த சந்தேக நபர் ஒருவர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
கடந்த ஒக்டோபர் 30ஆம் திகதி கிடைத்த இரகசியத் தகவலின் அடிப்படையில் கிரந்துருகொட்டை வன யானைகள் மேலாண்மைப் பிரிவினர் மேற்கொண்ட சோதனையின்போதே இந்தக் கைது இடம்பெற்றுள்ளது.
இதன்போது நான்கு யானைத்தந்தங்கள், யானை எலும்புத் துண்டுகள், சிறுத்தைத் தோல், முதலைத் தோல், மான் தோல்கள், புனுகுப்பூனை உடல் பாகங்கள் மற்றும் ஆயிரத்துக்கும் மேற்பட்ட மயில் இறகுகள் உள்ளிட்ட பெருமளவிலான வனவிலங்கு பாகங்கள் கைப்பற்றப்பட்டுள்ளன.
மேலும், சிறுத்தையின் மண்டை ஓடு, யானை வால் முடிகள், முள்ளம்பன்றி முட்கள் உள்ளிட்ட பொருட்களும் மீட்கப்பட்டுள்ளன.
கைது செய்யப்பட்ட சந்தேக நபரும் கைப்பற்றப்பட்ட பொருட்களும் மஹியங்கனை நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டதைத் தொடர்ந்து, எதிர்வரும் நவம்பர் 5ஆம் திகதி வரை சந்தேக நபரை விளக்கமறியலில் வைக்க நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.











