கிளிநொச்சி மாவட்டம் பூநகரி பகுதியில் சுமார் 20 கோடி ரூபாய் பெறுமதியான ஹெரோயின் மற்றும் ஐஸ் போதைப்பொருட்களை பொலிஸார் மீட்டுள்ளனர்.
இந்தச் சம்பவம் நேற்று இரவு இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
பூநகரி பொலிஸ் புலனாய்வுப் பிரிவுக்குக் கிடைத்த இரகசியத் தகவலின் அடிப்படையில் இந்த விசேட சோதனை நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளது.
இதன்போது, மன்னார் – யாழ்ப்பாணம் வீதியூடாக யாழ்ப்பாணம் நோக்கிப் பயணித்த இரண்டு மோட்டார் சைக்கிள்களை பொலிஸார் சோதனையிடுவதற்காக நிறுத்துமாறு சைகை காட்டியுள்ளனர்.
எனினும், மோட்டார் சைக்கிள்களில் பயணித்தவர்கள் பொலிஸாரின் உத்தரவைப் பின்பற்றாமல் தொடர்ந்து பயணித்துள்ளனர்.
இதனையடுத்து பொலிஸார் அவர்களைத் துரத்திச் சென்ற நிலையில், போதைப்பொருட்களை வீதியில் வீசிவிட்டு நான்கு சந்தேகநபர்களும் தப்பிச் சென்றுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
பூநகரி பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி அசேல குணதிலக தலைமையில் முன்னெடுக்கப்பட்ட இந்த நடவடிக்கையில், 13 கிலோ 950 கிராம் ஹெரோயினும், ஒரு கிலோ 40 கிராம் ஐஸ் போதைப்பொருளும் மீட்கப்பட்டுள்ளன.
மீட்கப்பட்ட போதைப்பொருட்களின் மொத்தப் பெறுமதி சுமார் 20 கோடி ரூபாய் என பொலிஸார் மதிப்பிட்டுள்ளனர்.
இதேவேளை, இந்த வெற்றிகரமான போதைப்பொருள் தடுப்பு நடவடிக்கையை கிளிநொச்சி மாவட்ட பொலிஸ் அத்தியட்சகர் புத்திக குணசேகர பாராட்டியுள்ளார்.
தப்பிச் சென்ற நான்கு சந்தேகநபர்களையும் அடையாளம் கண்டு கைது செய்வதற்கான விசாரணைகள் தொடர்ந்து முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.
மீட்கப்பட்ட போதைப்பொருட்களை நீதிமன்றில் முன்னிலைப்படுத்துவதற்கும் பொலிஸார் நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.
கிளிநொச்சி மாவட்டத்தில் இவ்வளவு அதிகளவிலான ஹெரோயின் மற்றும் ஐஸ் போதைப்பொருட்கள் மீட்கப்பட்ட முதல் சம்பவம் இதுவெனவும் தெரிவிக்கப்படுகிறது.











