யாழ்ப்பாண நகர் பகுதியில் பல்பொருள் அங்காடிகள், சுற்றுலா விடுதிகள் குடிபுகு சான்றிதழ்கள் இல்லாமல் இயங்கி வருவதாகவும், அவற்றுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கைகளை யாழ்ப்பாண மாநகர சபை எடுக்க வேண்டும் என வடமாகாண உள்ளூராட்சி ஆணையாளர் ச. சுதர்சன் தெரிவித்துள்ளார்.
யாழ்ப்பாண நகரத் தூய்மை உள்ளிட்ட விடயங்களை ஆராயும் விசேட கலந்துரையாடல் செயலகத்தில் ஆளுநர் தலைமையில் நடைபெற்ற போதே அவ்வாறு தெரிவித்தார்.
மேலும் தெரிவிக்கையில் ,
வடக்கு மாகாணத்தின் சில உள்ளூராட்சி மன்றங்கள் தமது எல்லைகளுக்குள் வணிக வளாகங்களை அமைப்பதற்கான நடவடிக்கைகளை முன்னெடுத்து வருகின்ற நிலையில், நீண்டகால வரலாற்றைக் கொண்ட யாழ்ப்பாண மாநகர சபை நகருக்குப் பொருத்தமான நவீன வணிகக் கட்டமைப்பைக் கொண்டிருக்க வேண்டியது அவசியம்.
தற்போதைய சந்தைக் கட்டடத்தில் முன்னெடுக்க வேண்டிய பணிகள் தொடர்பில் மாநகர சபை பொறியியலாளரால் கால எல்லையுடன் கூடிய பட்டியல் தயாரிக்கப்பட்டுள்ளதாகவும், அதனை மாநகர சபையில் சமர்ப்பித்து உரிய காலத்துக்குள் நிறைவேற்ற வேண்டும்
இதனூடாக, யாழ்ப்பாண மாநகர சபையின் வருமானத்தை மேலும் அதிகரிப்பதற்குப் பல வாய்ப்புகள் உள்ளது. தற்போது முன்னெடுக்கப்பட்டு வரும் ஆதன மீள் மதிப்பீட்டுப் பணிகள் நிறைவடைந்ததும் மாநகர சபையின் வருமானம் தற்போதைய நிலையிலிருந்து இரண்டு மடங்குக்கும் அதிகமாக அதிகரிப்பதற்கான வாய்ப்புள்ளது.
மேலும், நகரின் முக்கிய பல்பொருள் அங்காடிகள் மற்றும் ஹோட்டல்கள் குடிபுகு சான்றிதழ் பெறாமல் இயங்கி வருகிறது. இவ்வாறான நிறுவனங்கள் தொடர்பில் உரிய சட்ட நடவடிக்கைகளை மேற்கொள்வதன் மூலம் மாநகர சபையின் வருமானத்தை மேலும் பல மடங்கு அதிகரிக்க முடியும் என தெரிவித்தார்.











