அமெரிக்க வர்த்தகச் சட்டத்தின் 301 ஆம் பிரிவின் (Section 301) கீழ் முன்னெடுக்கப்பட்ட எட்டு மாத விசாரணையைத் தொடர்ந்து, சீனா மற்றும் இந்தியா உட்பட 14 முக்கிய வர்த்தகப் பங்காளிகள் மீது புதிய இறக்குமதி வரிகளை விதிக்க அமெரிக்கா முன்மொழிந்துள்ளது.
எனினும், இந்தப் புதிய வரிப் பட்டியலில் இலங்கை உள்ளடக்கப்படவில்லை எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அமெரிக்க வர்த்தகப் பிரதிநிதி அலுவலகம் இன்று வெளியிட்டுள்ள இந்த முன்மொழிவுகள், நாடுகள் மற்றும் உற்பத்திப் பொருட்களுக்கு ஏற்ப மாறுபட்ட வரி வீதங்களைக் கொண்டுள்ளன.
சீனாவிலிருந்து இறக்குமதி செய்யப்படும் சில பொருட்களுக்கு ஏற்கனவே உள்ள வரிகளுடன் மேலதிகமாக 20 சதவீத வரி முன்மொழியப்பட்டுள்ளதால், மொத்த வரிச்சுமை 40 சதவீதம் அல்லது அதற்கும் அதிகமாக உயரக்கூடும் எனத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
உள்நாட்டுத் தொழில்களுக்கு வழங்கப்படும் அரசாங்க மானியங்கள், அதிகப்படியான உற்பத்தித் திறன் (Excess manufacturing capacity) மற்றும் அமெரிக்க வர்த்தகத்திற்குப் பாதகமான ஏனைய கொள்கைகள் குறித்து நடத்தப்பட்ட விரிவான விசாரணையின் அடிப்படையில் இந்த நடவடிக்கைகள் முன்வைக்கப்பட்டுள்ளன.
இந்த முன்மொழிவுகள் இறுதி செய்யப்படுவதற்கு முன்னர் அமெரிக்காவின் பொதுமக்களின் கருத்துக்களையும் ஆலோசனைகளையும் பெறுவதற்கான நடைமுறைகள் முன்னெடுக்கப்படவுள்ளன.
அத்துடன், 2027 ஜனவரி மாதத்தில் புதிய வரிகள் அமுலுக்கு வரக்கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது.
உலகளாவிய வர்த்தக பதற்றங்கள் மீண்டும் அதிகரித்துள்ள நிலையில், இந்த வரி உயர்வுகள் வர்த்தக நிறுவனங்கள் மற்றும் நுகர்வோர் மீது ஏற்படுத்தக்கூடிய தாக்கங்கள் குறித்துக் கவலைகள் எழுந்துள்ளன.











