தேர்தல் முறைகேடுகள் தொடர்பான குற்றச்சாட்டுகளிலிருந்து கவனத்தைத் திசைதிருப்பவே தொகுதி மறுவரையறை (Delimitation) நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படுவதாகக் காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல் காந்தி குற்றஞ்சாட்டியுள்ளார்.
புதுடில்லியில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் உரையாற்றிய ராகுல் காந்தி, ஆளும் கட்சி இந்தியாவைச் சர்வாதிகார நாடாக மாற்ற அனுமதிக்கப்பட மாட்டாது எனத் தெரிவித்துள்ளார்.
மக்களவைத் தொகுதிகளின் எண்ணிக்கையை 850 ஆக உயர்த்துவதற்கான முன்மொழிவுகள் குறித்துக் கேள்வி எழுப்பிய அவர், தொகுதி எல்லைகளை மாற்றியமைப்பதன் மூலம் அரசியல் நலன்களுக்கு ஏற்பத் தேர்தல் வரைபடத்தை மாற்றியமைக்க முயற்சிகள் மேற்கொள்ளப்படுவதாகக் குற்றம்சாட்டியுள்ளார்.
தேர்தல் நடைமுறைகளில் நடைபெறுவதாகக் கூறப்படும் முறைகேடுகளை எதிர்க்கட்சிகள் அம்பலப்படுத்த முயன்ற நிலையில், அவற்றை மறைப்பதற்கும் புதிய வழிகளைத் திறப்பதற்கும் தொகுதி மறுவரையறைப் பிரயத்தனம் மேற்கொள்ளப்படுவதாக அவர் கூறியுள்ளார்.
மேலும், அசாம் மற்றும் ஜம்மு-காஷ்மீர் ஆகிய பகுதிகளில் முன்னெடுக்கப்பட்ட மறுவரையறை நடவடிக்கைகளைச் சுட்டிக்காட்டிய அவர், இது குறித்து எதிர்க்கட்சிகளுக்குக் கவலைகள் உள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.
மகளிர் இடஒதுக்கீட்டுச் சட்டத்தை நடைமுறைப்படுத்துவது தொடர்பாகவும் கருத்துத் தெரிவித்த அவர், பாராளுமன்றத்தின் தற்போதைய உறுப்பினர் எண்ணிக்கையிலேயே 33 சதவீத மகளிர் இடஒதுக்கீடு வழங்கப்பட வேண்டும் எனவும், அடுத்த 25 ஆண்டுகளுக்கு மாநிலங்களுக்கான மக்களவைத் தொகுதிப் பங்கீட்டில் மாற்றம் செய்யக் கூடாது எனவும் காங்கிரஸ் தரப்பில் கோரிக்கைகள் முன்வைக்கப்பட்டுள்ளன.
வரவிருக்கும் பாராளுமன்ற சிறப்புக் கூட்டத் தொடரில் முன்மொழியப்பட்ட தொகுதி மறுவரையறை மசோதாவை ‘இந்தியா’ (INDIA) கூட்டணிக் கட்சிகள் ஒன்றிணைந்து எதிர்க்கத் தீர்மானித்துள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.











