திருப்பரங்குன்றம் மலை உச்சியில் உள்ள தீபத்தூணில் தீபம் ஏற்ற உச்சநீதிமன்றம் பிறப்பித்த உத்தரவைத் தொடர்ந்து, மதுரை திருப்பரங்குன்றத்தில் இன்று சனிக்கிழமை (28.11.2026) பலத்த பாதுகாப்புடன் தீபம் ஏற்றப்பட்டது.
உச்சநீதிமன்ற உத்தரவின் அடிப்படையில், ஓய்வுபெற்ற உயர்நீதிமன்ற நீதியரசர்கள் வைத்தியநாதன் மற்றும் பார்த்திபன் ஆகியோர் மதுரைக்கு வருகை தந்து, திருப்பரங்குன்றம் சுப்பிரமணியசுவாமி கோவிலில் பூஜை செய்யப்பட்ட தீபக் கொப்பரையை மலைக்கு எடுத்துச் சென்றனர்.
அதனைத் தொடர்ந்து, பட்டர்கள் மற்றும் ஓய்வுபெற்ற நீதிபதிகள் முன்னிலையில் தீபத்தூணில் தீபம் ஏற்றப்பட்டதாக நீதியரசர் வைத்தியநாதன் தெரிவித்துள்ளார்.
முன்னதாக, திருப்பரங்குன்றம் மலை மற்றும் கோவில் பாதுகாப்புக்காக மத்திய ரிசர்வ் காவல்படை (CRPF) வீரர்கள் குவிக்கப்பட்டதுடன், பெங்களூருவிலிருந்து கூடுதல் படையினரும் வரவழைக்கப்பட்டனர்.
தீபம் ஏற்றும் ஏற்பாடுகள் நடைபெறும் வேளையில் மலை மீது ஏறுவதில் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டதால், பக்தர்களுக்கும் பாதுகாப்புப் படையினருக்கும் இடையே சிறிது வாக்குவாதங்கள் ஏற்பட்டன.
இதேவேளை, சிக்கந்தர் தர்காவில் சிறப்புத் தொழுகைக்காக வந்த இஸ்லாமியர்களும் உரிய ஆவணங்கள் மற்றும் விவரப் பதிவுகளுடன் அனுமதிக்கப்பட்டனர்.
இச்சம்பவம் தொடர்பாகப் பல்வேறு அரசியல் தலைவர்களும் கருத்துத் தெரிவித்து வருகின்றனர்.











