மன்னார் மாவட்ட பெண்கள் விழிப்புணர்வு சங்கத்தினால் ’16 நாட்கள் பாலின அடிப்படையிலான வன்முறைக்கு எதிரான செயற்பாடு’ (16 Days of Activism) எனும் விழிப்புணர்வு நிகழ்வு மன்னார் சமூக பொருளாதார மேம்பாட்டுக்கான நிறுவனத்தின் அனுசரனையுடன் இன்றைய தினம் புதன்கிழமை(25) காலை மன்னார் நகர பேருந்து தரிப்பிடத்தில் ஆரம்பித்து வைக்கப்பட்டது.
பேருந்துகளில் மதுபோதையில் பயணிப்பவர்களாலும், சில பயணிகளின் அநாகரிகமான நடத்தைகளாலும் பெண்கள் மற்றும் சிறுவர்கள் எதிர்கொள்ளும் பாலியல் ரீதியான துன்புறுத்தல்கள், அசௌகரியங்கள் மற்றும் பாதுகாப்பு அச்சுறுத்தல்களுக்கு எதிராகக் குரல் கொடுக்கும் வகையில் இந்த நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டது.
இதன் ஒரு பகுதியாக பொதுமக்கள், தனியார் மற்றும் அரசு போக்குவரத்துச் சேவைகளின் சாரதிகள், நடத்துனர்கள் (Conductor) உள்ளிட்ட அனைத்து தரப்பினருக்கும் பெண்கள் மற்றும் சிறுவர்களின் பாதுகாப்பு தொடர்பான விழிப்புணர்வை ஏற்படுத்தும் நோக்கில் துண்டுப் பிரசுரங்கள் விநியோகிக்கப்பட்டன.
குறிப்பாக பேருந்து பயணங்களின் போது பெண்கள் மற்றும் சிறுவர்களுக்கு எதிரான துன்புறுத்தல்கள் மற்றும் அநாகரீகமான செயற்பாடுகள் இடம் பெறுவதை தடுப்பதிலும், அவ்வாறான சந்தர்ப்பங்களில் சாரதிகள் மற்றும் நடத்துனர்கள் பொறுப்புடன் செயல்பட வேண்டியதன் அவசியத்தை வலியுறுத்தியும், பெண்களினதும் சிறுவர்களினதும் பாதுகாப்பான பயண உரிமையை உறுதி படுத்துவதும், பொதுப் போக்குவரத்துச் சேவைகளை அனைவருக்கும் பாதுகாப்பான இடமாக மாற்றுவதற்கான சமூகப் பொறுப்புணர்வை இச்செயற்பாடு முன்னெடுக்கப்பட்டது.
குறித்த நிகழ்வில் பெண்கள் அமைப்புகளின் பிரதிநிதிகள், மன்னார் சமூக பொருளாதார மேம்பாட்டுக்கான நிறுவன இயக்குனர் மற்றும் பணியாளர்களும் கலந்து கொண்டனர்.











