கியூபெக் மாகாணத்தில் அதிகாரப்பூர்வ மொழியான பிரெஞ்சு மொழியைப் பாதுகாக்கும் ‘பிரெஞ்சு மொழி சாசனம்’ மீறப்படுவதாகக் கூறி, மாகாண மொழி விழிப்புணர்வுக் கண்காணிப்பு அமைப்பிடம் (OQLF) பொதுமக்கள் அளித்துள்ள புகார்களின் எண்ணிக்கை முன் எப்போதும் இல்லாத அளவாக உயர்ந்துள்ளது.
அந்த எண்ணிக்கை 11,000-ஐத் தாண்டி புதிய வரலாற்று உச்சத்தைப் பதிவு செய்துள்ளது.
கியூபெக் மாகாணத்தின் உத்தியோகபூர்வ மொழி கண்காணிப்பு அமைப்பு, பொதுமக்கள் அளித்துள்ள புகார்களின் புதிய புள்ளிவிவரங்களை வெளியிட்டுள்ளது.
அவற்றின்படி, கடந்த 2025 ஏப்ரல் மாதம் 1 ஆம் திகதி முதல் 2026 மார்ச் 31 ஆம் திகதி வரையிலான நிதியாண்டில் மட்டும், மொத்தமாக 11,125 புகார்கள் இந்த விடயம் தொடர்பில் பதிவாகியுள்ளன.
இது முந்தைய நிதியாண்டின் புகார்களை விட 7 சதவீதம் அதிகமாகும்.
பிரெஞ்சு மொழியில் சேவைகளைப் பெறுவதற்கும், தகவல்களை அறிவதற்கும் தங்களுக்கு உள்ள மொழிசார் உரிமைகள் பறிக்கப்படுவதாகக் கியூபெக் மக்கள் கொண்டுள்ள அதிருப்தியையும் கவலையையும் இந்தத் தரவுகள் வெளிப்படுத்துவதாக உத்தியோகபூர்வ மொழி கண்காணிப்பு அமைப்பு தனது அறிக்கையில் சுட்டிக்காட்டியுள்ளது.











