நாட்டில் டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகின்ற நிலையில் மன்னார் மாவட்டத்தில் இதுவரை 47 டெங்கு நோயாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ள நிலையில்,டெங்கு நோயின் தாக்கத்தை கட்டுப்படுத்த பொதுமக்களின் ஒத்துழைப்பு அவசியமாக உள்ளது என மன்னார் மாவட்ட பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்தியர் எம்.எச்.எம்.அஸாத் தெரிவித்துள்ளார்.
மன்னார் மாவட்ட பிராந்திய சுகாதார சேவைகள் பணிமனையில் இன்று சனிக்கிழமை (4) காலை இடம்பெற்ற ஊடக சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்,
மன்னார் மாவட்டத்தில் டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை 47 ஆக காணப்படுகிறது. பாடசாலைகள், பொது இடங்கள், அரச நிறுவனங்கள் மற்றும் தனியார் காணி நிலங்கள் போன்ற 50க்கும் அதிகமான இடங்களில் டெங்கு பெருக்கத்திற்கான புழும்புகள் கண்டறியப்பட்டுள்ளன.
இதனை கட்டுப்படுத்த மக்கள் சுற்றுப்புறச் சூழலையும், வீட்டின் உள்ளே நீர் சேமித்து வைக்கப்பட்டுள்ள இடங்களையும் தூய்மையாக வைத்திருக்க வேண்டும்.வீடுகளில் உள்ள குளிர்சாதனப் பெட்டிகளை அடிக்கடி கவனித்து சுத்தம் செய்ய வேண்டும்.
வீதியோரங்களில் உள்ள கழிவு நீர் வாய்க்கால்கள் மற்றும் நீர் தேங்கும் இடங்களில் பொதுமக்கள் கழிவுகளையோ குப்பைகளையோ கொட்டுவதை தவிர்க்க வேண்டும். கை விடப்பட்டு கிடக்கும் காணி நிலங்களை சுத்தப்படுத்துவதற்கு உரிய சுகாதார மருத்துவ அதிகாரிக்குத் தெரியப்படுத்த வேண்டும்.
காய்ச்சல் ஏற்பட்டால், குறிப்பாகச் சிறுவர்கள், கர்ப்பிணித் தாய்மார்கள், முதியவர்கள் மற்றும் நாள்பட்ட நோயுடையவர்கள் 24 மணித்தியாலங்களுக்குள் மருத்துவரை நாட வேண்டும்.
காய்ச்சல் குறையாத பட்சத்தில், இரண்டு நாட்களில் மாவட்ட பொது மருத்துவமனைக்கு சென்று Full Blood Count (FBC) மற்றும் டெங்குவிற்கான NS1 பரிசோதனைகளை மேற்கொள்வது அவசியமாகும்.அரச மற்றும் தனியார் நிறுவன பணியாளர்கள் பணியாளர்கள் அனைவரும் தினமும் குறைந்தது அரை மணித்தியாலங்கள் (30 நிமிடங்கள்) தங்களது வளாகத்தைச் சுத்தப்படுத்துவதற்கு ஒதுக்க வேண்டும்.
டெங்கு நுளம்பு பெருக்கம் ஏற்படக்கூடிய சாத்தியமான இடங்களை இனங்கண்டு உடனடியாக நடவடிக்கை எடுத்தல்,ஆசிரியர்கள் மற்றும் மாணவர்கள் ஒன்றிணைந்து டெங்கு ஒழிப்பு நடவடிக்கைகளில் ஈடுபட வேண்டும்.கணிசமான அளவில் நுளம்பு பெருக்கம் அடையாளம் காணப்பட்டுள்ளதால், பாடசாலை வளாகங்களில் வார அடிப்படையில் முழுமையாக பரிசோதிக்க வேண்டும்
தொண்டு நிறுவனங்கள், முப்படையினர், நகர சபை மற்றும் பிரதேச சபை உறுப்பினர்கள் ஒன்றிணைந்து பொது இடங்களில் உள்ள குப்பைகளை உடனுக்குடன் அகற்ற வேண்டும்.
காணி மற்றும் பொது இடங்களில் நீர் தேங்க கூடிய வெற்றுப் பாத்திரங்கள், கொள்கலன்களை அகற்றி அப்புறப்படுத்த வேண்டும்
பொதுமக்கள் தங்களது வீட்டுச் சூழலை தினமும் அரை மணித்தியாலங்கள் சுத்திகரிக்க வேண்டும்.சேகரிக்கப்படும் குப்பைகளை நீர் தேங்காத வண்ணம் முறையான வழிகளில் அழிக்க அல்லது அப்புறப்படுத்த வேண்டும். சமீபத்திய கள ஆய்வுகளின்படி 1,500 க்கும் மேற்பட்ட வீடுகளில் பரிசோதனை செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.











