மொன்றியல் மாநகரின் புகழ்பெற்ற ‘லஷின் கால்வாயில்’ (Lachine Canal) இரு நபர்கள் உயிரிழந்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. அந்தக் கால்வாயில் தவறி விழுந்த ஒருவரைக் காப்பாற்ற, மற்றொருவர் தண்ணீரில் குதித்துள்ளார்.
அதன் போது போது இருவருமே, ‘லஷின் கால்வாய்’ நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளனர். உயிரிழந்த இருவரும் 20-களின் ஆரம்ப வயதை உடைய இளைஞர்கள் எனத் தெரியவந்துள்ளது. இருவரும் ‘உயிர் ஆபத்தான நிலையில்’ (Critical condition) மீட்கப்பட்டு மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டதாக, கியூபெக்கின் அவசர மருத்துவச் சேவை அமைப்பான ‘உர்ஜென்சஸ்-சாந்தே’ (Urgences-santé) செய்தித் தொடர்பாளர் ஸ்டீவ் மக்டஃப் முதலில் அறிவித்திருந்தார்.
எனினும், மருத்துவமனையில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்ட போதிலும், அவர்கள் ஏற்கனவே மூச்சுத்திணறி உயிரிழந்துவிட்டதை மருத்துவர்கள் உறுதிப்படுத்தியுள்ளனர்.
உயிரிழந்தவர்களில் ஒருவர் ஆண் என்று அடையாளம் காணப்பட்டுள்ளார். இந்த விவகாரம் தற்போது கியூபெக் மரண விசாரணை அதிகாரி (Coroner’s office) வசம் ஒப்படைக்கப்பட்டு, முழுமையான விசாரணை முடுக்கிவிடப்பட்டுள்ளது.
இதேவேளை, நாட்டில் நிகழும் நீரில் மூழ்கிய விபத்துகளில், தண்ணீரில் தவிக்கும் ஒருவரைக் காப்பாற்ற முயன்றவர்களே அதிகம் உயிரிழப்பதாக புள்ளிவிவரங்கள் எச்சரிக்கின்றமை குறிப்பிடத்தக்கது.











