மொன்றியல் மாநகருக்கு அருகே அமைந்துள்ள மிராபெல் (Mirabel) நகரின் ‘ரூட் 148’ (Route 148) நெடுஞ்சாலையில் இன்று நேர்ந்த சாலை விபத்தில், காரைச் செலுத்தி வந்த பெண் ஒருவர், உயிரிழந்துள்ளார்.
45 வயது மதிக்கத்தக்க பெண் ஒருவர் ஓட்டி வந்த சிறிய ரகக் காரும், 60 வயது முதியவர் ஓட்டி வந்த செமி-டிரக் எனப்படும் கனரக லொரியும்நேருக்கு நேர் மோதிக்கொண்டன.
இந்த அதிவேக மோதலின் தாக்கத்தால் காரின் இடிபாடுகளுக்குள் சிக்கிய அந்த 45 வயதுப் பெண் சம்பவ இடத்திலேயே உயிரிழந்ததாக மீட்புப்
படையினர் அறிவித்துள்ளனர். அவருடன் மோதிய பெரிய ரக செமி-டிரக் (Semi-truck) லொரியின் சாரதி மிக மோசமான காயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
விபத்து நேரிட்ட போது காரும் லாரியும் எந்தெந்த திசையில் பயணித்தன அல்லது மோதலுக்கான உடனடிப் பின்னணி என்ன என்பது தற்போதைக்குத் தெரியவில்லை என்று மிராபெல் பொலிஸ் செய்தித் தொடர்பாளர் ஜாக் காசா (Jacques Caza) தெரிவித்துள்ளார்.
விபத்தின் தீவிரத்தன்மை மற்றும் உயிரிழப்பு காரணமாக, மிராபெல் உள்ளூர் பொலிஸாருக்குத் துணையாக கியூபெக் மாகாணத்தின் முதன்மைப் பொலிஸ் அமைப்பான ‘சுரெட்டே டு கியூபெக்’ பிரிவின் விபத்து நிபுணர்கள் சம்பவ இடத்திற்கு வரவழைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.











