டொராண்டோ தெற்கு தடுப்புக்காவல் மையத்தில் (Toronto South Detention Centre) பணியாற்றும் குறித்த சிரேஷ்ட சிறை அதிகாரி ஒருவர், கைதிகளை அச்சுறுத்தியதாகவும், முறையற்ற உடல் சோதனை (Strip searches) உள்ளிட்ட சித்திரவதைகளை மேற்கொண்டதாகவும் நீதிமன்றத்தில் குற்றம் சாட்டப்பட்டுள்ளது.
துப்பாக்கிக் கடத்தல் குற்றச்சாட்டில் ஏற்கனவே குற்றவாளியாகக் காணப்பட்டு, கடந்த 2024 ஆம் ஆண்டு பெப்ரவரி முதல் இந்தச் சிறையில்
அடைக்கப்பட்டுள்ள ஜோசுவா ஜேம்ஸ் மால்கம்-ஈவான்ஸ் (Joshua James Malcolm-Evans) என்ற கைதியே, இந்த புகாரை நீதிமன்றத்தில் பிரமாணப்
பத்திரமாகத் தாக்கல் செய்துள்ளார்.
தனது மனித உரிமைகள் மீறப்பட்டுள்ளதாகக் கூறி, தனக்கான தண்டனைக் காலத்தைக் குறைக்குமாறு அந்தக் கைதி கோரியுள்ளார். இந்த விவகாரம் தொடர்பான வழக்கு விசாரணை ஒன்றில் முன்னிலையாகி முதன்முறையாகப் பகிரங்கமாகப் பேசிய அந்த சிரேஷ்ட சிறை அதிகாரி, தன் மீதான குற்றச்சாட்டுக்களை முழுமையாக மறுத்துள்ளார்.
கைதிகள் மற்றும் சக ஊழியர்களுடனான தனது அணுகுமுறை எப்போதும் கண்ணியமானதாகவும், தொழில்முறை சார்ந்ததாகவும் மட்டுமே
இருந்துள்ளதாக, அவர் குறிப்பிட்டுள்ளார்.
தனது கடுமையான கடமை உணர்வு காரணமாகவே திட்டமிட்ட குற்றக் குழுக்கள் லஞ்சம் கொடுத்து, காவல்துறை அதிகாரி ஒருவரின் உதவியுடன் தனது வீட்டு முகவரியைப் பெற்று தன்னைக் கொல்ல முயன்றதாகவும் அந்த சிரேஷ்ட சிறை அதிகாரி, கூறியுள்ளார்.
கடந்த ஆண்டு ஜூன் இல் இந்தச் சிறை அதிகாரியின் வீட்டின் மீது ஆயுதமேந்திய மர்ம நபர்கள் தாக்குதல் நடத்தி, அவரைக் கொலை செய்ய
முயன்ற சம்பவத்தை அடுத்தே, யோர்க் பிராந்தியக் காவல்துறை ‘புரொஜெக்ட் சவுத்’ என்ற மாபெரும் ஊழல் தடுப்புப் புலனாய்வை ஆரம்பித்தது.
இந்த விசாரணையின் மூலம், டொராண்டோ காவல்துறையின் காவற்துறை அதிகாரி திமோதி பார்ன்ஹார்ட் (Timothy Barnhardt) என்பவர் லஞ்சம் பெற்றுக்கொண்டு, இந்தச் சிறை அதிகாரியின் ரகசிய வீட்டு முகவரியை சர்வதேசக் குற்றக் கும்பல்களுக்குக் கசியவிட்டமை வெளித்தெரிய வந்தது.
இந்த விசாரணையில் இதுவரை 7 டொராண்டோ காவற்துறை அதிகாரிகள் உட்பட மொத்தம் 27 பேர் கைது செய்யப்பட்டுள்ளதுடன், அவர்கள் மீதான வழக்குகள் தற்போது நீதிமன்ற விசாரணையில் உள்ளமை குறிப்பிடத்தக்கது.











