பிரிட்டிஷ் கொலம்பியா மாகாணக் கடற்பரப்பில் சுற்றுலாப் படகொன்று மூழ்கி விபத்துக்குள்ளான சம்பவத்தில், கடலில் இருந்து மீட்கப்பட்டு
வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்த 28 வயதுடைய பெண் ஒருவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.
ரிச்மண்ட் நகருக்கு அருகிலுள்ள ராபர்ட்ஸ் பாங்க் (Roberts Bank) கடற்பகுதியில் 10 பேருடன் பயணித்த வணிக ரீதியிலான மீன்பிடி சுற்றுலாப்
படகு (Charter Boat) திடீரென நீரில் மூழ்கி விபத்துக்குள்ளானது. இந்த விபத்தின் போது கடலில் தத்தளித்த நால்வர் மீட்கப்பட்டு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்தனர்.
அவர்களில், அமெரிக்காவின் சீட்டிலில் வசித்து வந்த 28 வயதுடைய சீனப் பிரஜையான இளம் பெண் ஒருவர், தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் இன்று அறிவித்துள்ளனர்.
பொலிஸார் வெளியிட்டுள்ள உத்தியோகபூர்வ விபரங்களின்படி, விபத்துக்குள்ளான படகில் இருந்த 10 பேரும் 20 மற்றும் 30 வயதுகளுக்கு
இடைப்பட்டவர்கள் என்பதுடன், அவர்கள் பிரிட்டிஷ் கொலம்பியா, ஒன்டாரியோ மற்றும் அமெரிக்காவின் வொஷிங்டன் மாநிலத்தைச்
சேர்ந்தவர்கள் என அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்த ஏனைய மூவரும் தற்போது பூரண குணமடைந்து வீடு திரும்பியுள்ளமை குறிப்பிடத்தக்கது.











