நாட்டின் பூர்வகுடிமக்கள் (First Nations) தங்களின் பாதுகாப்பான குடிநீருக்கான உரிமைகளைப் பாதுகாப்பதற்காக, மத்திய அரசுடன் கடுமையான சட்ட ரீதியிலான மற்றும் அரசியல் ரீதியிலான போராட்டத்தை முன்னெடுக்கத் தயாராகி வருவதாகத் தெரிவித்துள்ளனர்.
ஒட்டாவாவில் ஆரம்பமாகியுள்ள ‘பூர்வகுடி மக்கள் தேசிய சபையின்’ வருடாந்தக் கூட்டத்தொடரில் பங்கேற்ற பூர்வகுடித் தலைவர்கள், லிபரல்
கட்சி அரசாங்கம் குடிநீர் விவகாரத்தில் அரசியல் விளையாட்டுகளில் ஈடுபடுவதாகக் கடுமையான குற்றச்சாட்டுகளை முன்வைத்துள்ளனர்.
பூர்வகுடி மக்களின் தேசிய சபையின் மாநாடு தொடங்குவதற்கு முன்னதாக, ஒட்டாவா நதியைக் கடந்து ஒரு குறியீட்டு அமைதி நடைபயணம் (Water Walk) மேற்கொள்ளப்பட்டது. கியூபெக்கின் கெட்டினோவிலுள்ள (Gatineau) கனேடிய வரலாற்று அருங்காட்சியகத்தில் பாரம்பரிய வழிபாடுகளுடன் ஆரம்பமான இப்பேரணியில், நூற்றுக்கும் மேற்பட்ட பூர்வகுடித் தலைவர்கள், சமூகப் பிரதிநிதிகள் மற்றும் ஆர்வலர்கள் கலந்துகொண்டனர்.
அலெக்ஸாண்ட்ரா பாலத்தைக் கடந்து மாநாடு நடைபெறும் ‘ரோஜர்ஸ் கொன்வென்ஷன் சென்டர்’ (Rogers Convention Centre) நோக்கி அமைதியாக நடந்த இந்தப் பேரணியில், தண்ணீரைப் பாதுகாப்பதன் அவசியம் வலியுறுத்தப்பட்ட போதிலும், அதன் பின்னால் வலுவான
அரசியல் எதிர்ப்புக் குரல்கள் ஒலித்தன.
மாநாட்டின் தொடக்க அமர்வில் பேசிய பூர்வகுடித் தலைவர்கள், சுத்தமான குடிநீர் பெறுவதில் தங்களது பூர்வகுடிசமூகங்கள் எதிர்கொள்ளும்
தொடர்ச்சியான சவால்களைப் பட்டியலிட்டனர்.
லிபரல் அரசாங்கத்தால் முன்மொழியப்பட்டுள்ள புதிய “பூர்வகுடி மக்கள் சுத்தமான குடிநீர் சட்டமூலம்” ஆனது, பூர்வகுடி மக்களின் அடிப்படை உரிமைகளைத் தெளிவாக அங்கீகரிக்கத் தவறிவிட்டதாக, பூர்வகுடி சமூகங்களின் தலைவர்கள் விமர்சித்துள்ளமை சுட்டிக்காட்டத் தக்கது.











