கனடா மற்றும் சீனாவுக்கு இடையே எட்டப்பட்ட புதிய வரிக்கொள்கை உடன்படிக்கையின் பலனாக, சீன மின்சார வாகனத் (EV) தயாரிப்பு நிறுவனங்கள் கனேடியச் சந்தையில் தங்களின் ஆதிக்கத்தைச் செலுத்தத் தொடங்கியுள்ளன.
குறிப்பாக, கியூபெக் மாகாண நுகர்வோரிடையே மின்சார வாகனங்களுக்கான விழிப்புணர்வும் வரவேற்பும் அதிகமாக இருப்பதால், சீன நிறுவனங்கள் தங்களின் சந்தை விரிவாக்கத்திற்கு கியூபெக்கை முதன்மைத் தளமாகத் தேர்ந்தெடுத்துள்ளன.
சீனாவின் முன்னணி வாகன உற்பத்தி நிறுவனங்களில் ஒன்றான ‘டாங்ஃபெங் மோட்டார் கார்ப்பரேஷன்’, தனது புதிய மின்சார வாகனங்களை மொன்றியலின் பழைய துறைமுகப் பகுதியில் ஊடகவியலாளர்கள் முன்னிலையில் உத்தியோகபூர்வமாக அறிமுகப்படுத்தியுள்ளது.
கனேடியச் சந்தையில் நுழைவதற்குத் தேவையான தரச்சான்றிதழ் நடைமுறைகளில் தற்போது ஈடுபட்டுள்ள இந்த சீன நிறுவனத்தின் இரு முக்கிய வாகனங்களும், அடுத்த ஆண்டுக்குள் கனேடியச் சாலைகளுக்கு விற்பனைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.
டாங்ஃபெங் நிறுவனத்தின் கனேடிய விநியோகஸ்தரான ‘நோர்த் வேர்ல்ட் இண்டஸ்ட்ரி’ (North World Industry) இயக்குநர் ஜுலி மசோரா பெர்னாண்டஸ் (Julie Mazorra Fernández) கருத்துப்படி, அறிமுகப்படுத்தப்பட்டுள்ள இரண்டு வாகனங்களும் 35,000 கனேடிய டொலருக்கும் குறைவான விலையிலேயே சந்தைப்படுத்தப்படவுள்ளன.
முன்னதாக, சீனாவின் கீலி (Geely) நிறுவனத்திற்குச் சொந்தமான ஆடம்பர ‘லோட்டஸ் எலெட்ரா’ (Lotus Eletre) ரக வாகனங்கள் முதலாவது தொகுதியாகக் கனடாவிற்குள் இறக்குமதி செய்யப்பட்டு, ஜூலை மாத ஆரம்பத்தில் மொன்றியலில் காட்சிப்படுத்தப்பட்டிருந்தன.
அதேவேளை, உலகின் மிகப்பெரிய மின்சார வாகன உற்பத்தியாளரான பி.ஒய்.டி (BYD) நிறுவனமும் கனடாவில் 6 புதிய விற்பனை முகவர் நிலையங்களைத் (Dealerships) திறக்கத் திட்டமிட்டுள்ளமை சுட்டிக்காட்டத் தக்கது.











