ஹோர்முஸ் நீரிணை முழுவதும் திறக்கப்படுவதற்கான ஒப்பந்தம் இன்றோ நாளையோ கையெழுத்தாகும் என அமெரிக்க கருவூலச் செயலாளர் ஸ்காட் பெசென்ட் தெரிவித்துள்ளார்.
ஹோர்முஸ் நீரிணையில் சரக்குக் கப்பல்கள் மீது ஈரான் தாக்குதல் நடத்தியதாகக் குற்றம்சாட்டிய அமெரிக்கா அந்நாட்டின் மீது தாக்குதலைத் தொடர்ந்தது. இதனால், அமெரிக்கா – ஈரான் இடையே ஸ்விட்சர்லாந்தில் கையெழுத்தான அமைதி ஒப்பந்தம் ரத்து செய்யப்பட்டது.
இந்தப் போரில், ஈரானின் முக்கிய கட்டமைப்புகளின் மீது அமெரிக்கா நடத்திய தாக்குதல்களுக்குப் பதிலடியாக வளைகுடா நாடுகளில் அமைந்துள்ள அமெரிக்க கட்டமைப்புகளின் மீது ஈரானிய படைகள் தாக்குதல் நடத்தி வந்தன. இதனால் இருபுறமும் தாக்குதல்கள் மீண்டும் தீவிரமடைந்தன.
இதைத் தொடர்ந்து, இந்தப் போரை முடிவுக்குக் கொண்டுவர, பல்வேறு நாட்டின் தலைவர்கள் தங்களது மத்தியஸ்த முயற்சியில் ஈடுபட்டு வரும் நிலையில், கடந்த ஞாயிற்றுக்கிழமை (ஒகஸ்ட் 2) அன்று, ஈரான் மீதான தாக்குதல்கள் நிறுத்தப்படுவதாக அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் அறிவித்திருந்தார்.
இந்த நிலையில், அமெரிக்க கருவூலச் செயலாளர் ஸ்காட் பெசென்ட், தனியார் செய்தி நிறுவனத்துக்கு அளித்த பேட்டியில் ஹோர்முஸ் நீரிணை முழுவதும் திறக்கப்படுவதற்கான ஒப்பந்தம் இன்றோ நாளையோ கையெழுத்தாகும் என்று தெரிவித்துள்ளார்.











